புதிய நடைமுறையின் கீழ், புதிதாக வருவோரின் கைரேகை, பிறந்த நாடு, உடல்நிலை மற்றும் சாத்தியமான பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் பதிவு செய்யப்பட்டு பரிசோதிக்கப்படும். ஆரம்ப மதிப்பீட்டில் ஒருவர் பாதுகாப்பு அச்சுறுத்தலாகக் கருதப்பட்டாலோ அல்லது புகலிடம் வழங்கப்படுவதற்கான வாய்ப்பு குறைவாக இருந்தாலோ, ஜெர்மனியின் கூட்டாட்சி குடியேற்றம் மற்றும் அகதிகள் அலுவலகம் எல்லையிலேயே அகதி நடைமுறையைத் தொடங்க உத்தரவிட முடியும்.
விமான நிலையங்களில் அடைக்கப்பட்ட மையங்கள்
விமானம் மூலம் ஜெர்மனிக்கு வருவோர், தங்கள் விண்ணப்பம் பரிசீலிக்கப்படும் வரை விமான நிலையங்களில் உள்ள அடைக்கப்பட்ட மையங்களில் தங்க வைக்கப்படலாம். பெர்லின், முனிச் மற்றும் பிராங்க்பர்ட் விமான நிலையங்களில் இத்தகைய மையங்கள் உள்ளன. புதிய EU asylum reforms கீழ், இம்மையங்களில் தங்க வைக்கப்படும் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியின் சம்பந்தப்பட்ட அலுவலகம் அதிகபட்சம் 12 வாரங்களுக்குள் முடிவு எடுக்க வேண்டும்.
முன்பு பாதுகாப்பான நாடுகள் எனக் குறிப்பிடப்பட்ட நாடுகளில் இருந்து வருவோருக்கே விமான நிலைய நடைமுறை பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டது. தற்போது பிற நாடுகளில் இருந்து வருவோரும் இந்த நடைமுறைக்கு உட்படுத்தப்படலாம்.
மேலும், மத்தியதரைக் கடல் பகுதி நாடுகளுக்கு ஆதரவாக மற்ற ஒன்றிய நாடுகள் அகதிகளை ஏற்றுக்கொள்வது, நிதி அல்லது அமைப்பு சார்ந்த உதவிகளை வழங்குவது ஆகியவற்றை உள்ளடக்கிய “ஒற்றுமை” முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எந்த நாடும் அகதிகளை கட்டாயமாக ஏற்க வேண்டியதில்லை. தேவாலயங்களும் மனித உரிமை அமைப்புகளும், எல்லை மையங்களில் விசாரணை நடத்தப்படுவதால் அகதிகளின் உரிமைகள் மற்றும் குழந்தைகளுடன் வரும் குடும்பங்களுக்கான சேவைகள் பாதிக்கப்படலாம் எனக் கவலை தெரிவித்துள்ளன.

































