வடகரா காவல் நிலையத்தில் நேற்று காலை 10 மணியளவில் கையெழுத்திடச் சென்ற கீர்த்தனாவை, பேருந்து ஓட்டுநரான ஜினீஷ் திடீரென வழிமறித்து கத்தியால் சரமாரியாகக் குத்தியதாக போலீஸார் தெரிவித்தனர்.
காவல் நிலைய வளாகத்திலேயே நடந்த தாக்குதல்
கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் காயமடைந்த கீர்த்தனா உடனடியாக மீட்கப்பட்டு கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அவசர அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
கீர்த்தனாவைத் தாக்கிய ஜினீஷை போலீஸார் உடனடியாகக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இருவரும் முன்பு ஒன்றாக வசித்து வந்ததாகவும், போதைப்பொருள் வழக்கில் கீர்த்தனா கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியேறிய பின்னர் ஜினீஷுடனான தொடர்பைத் துண்டித்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் கீர்த்தனாவைக் கொல்லும் நோக்கத்துடன் தாக்கியதாக ஜினீஷ் போலீஸ் விசாரணையில் வாக்குமூலம் அளித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த Kerala police station stabbing சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போதைப்பொருள் வழக்கின் பின்னணி
வடகரை பகுதியில் எம்.டி.எம்.ஏ விற்பனை செய்ததாகக் கூறப்படும் வழக்கில், பேராம்பிறா பி.ஆர்.சி சிறப்பு பள்ளி ஆசிரியை கீர்த்தனா, செறுவளூர் பள்ளி ஆசிரியை காவ்யா மற்றும் நீஷ்மா ஆகியோர் கடந்த மாதம் கைது செய்யப்பட்டனர். சமூக வலைதளங்கள் மூலம் போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பில் இருந்து பணப் பரிவர்த்தனைகளில் ஈடுபட்டதாக போலீஸார் தெரிவித்தனர். இதையடுத்து கீர்த்தனா பணியிலிருந்து நீக்கப்பட்டார்.






























