ஜெயமாதவன் நாயர் மரணம் குறித்து முக்கியத் தடயங்கள்
கூடத்தில் தறவாடு எனப்படும் உமா மந்திரம் வீட்டில் 1991 முதல் 2017 வரை ஏழு மர்ம மரணங்கள் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. இந்தக் குடும்பத்துக்கு திருவனந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ரூ.200 கோடிக்கும் அதிகமான சொத்துகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் குடும்ப வாரிசுகளான கோபிநாத பிள்ளை, அவரது மனைவி சுமுகியம்மா, அவர்களது பிள்ளைகள் மற்றும் உறவினர்கள் அடங்குவர்.
2017 ஏப்ரல் 2ஆம் தேதி ஜெயமாதவன் நாயர் வீட்டில் மயங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவரது மரணம் தொடர்பான நேரம் மற்றும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற விதம் குறித்து முரண்பாடுகள் இருப்பதாக போலீஸார் கூறினர்.
வீட்டிலிருந்த கட்டில் மற்றும் மரக்கட்டையில் கிடைத்த ரத்தக்கறைகள் ஜெயமாதவன் நாயருடையவை என தடயவியல் ஆய்வில் உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தலையில் பலமாக ஏற்பட்ட காயமே மரணத்துக்குக் காரணம் என்றும், அது கீழே விழுந்ததால் ஏற்பட்டதல்ல என்றும் ஆய்வுகள் சுட்டிக்காட்டின. அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற காரிலும் ரத்தத் தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
ஜெயமாதவன் நாயரின் சொத்துகளை மாற்றுவதற்காக தயாரிக்கப்பட்ட உயிலில் இருந்த கையெழுத்து போலியானது எனவும் போலீஸார் தெரிவித்தனர். திருமணம் செய்துகொண்டால் சொத்துகளுக்கு வேறு வாரிசுகள் உருவாகலாம் என்ற அச்சத்தில், ரவீந்திரன் நாயர் அவரைத் தாக்கி கொலை செய்ததாக விசாரணையில் தெரியவந்ததாக கூறப்படுகிறது. இந்த Kerala property murder case-ல் நீதிமன்ற முன்னாள் ஊழியர் அனில் மற்றும் கார் ஓட்டுநர் சஜு ஆகியோரும் உடந்தையாக வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர்.





























