மூதாதையர் எச்சங்கள் கண்ட இடத்தில் மாற்றம்
ஹோலி டிரினிட்டி தேவாலய வளாகத்தில் ஏப்ரல் தொடக்கத்தில் எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டன. மார்ச் மாதத்தில் தொடங்கிய மேம்பாட்டுப் பணிகள் உடனடியாக இடைநிறுத்தப்பட்டு, எச்சங்கள் பரிசோதனைக்காக பிரதான நிலப்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டன. மே மாத தொடக்கத்தில் அவை மீண்டும் தீவுக்கு கொண்டு வரப்பட்டு, கலாசார மரபுகளுக்கு ஏற்ப அடக்கம் செய்யப்பட்டன.
ரோட்னெஸ்ட் தீவு ஆணையம், வாட்ஜெமப் திட்டத்துடன் தொடர்புடைய பழங்குடியினர் அமைப்புகளுடன் ஆலோசித்த பின்னர், தற்போதைய இடத்தில் Rottnest Island bus stop project தொடராது என்று தெரிவித்துள்ளது. வாட்ஜெமப் அபோரிஜினல் ரெஃபரன்ஸ் குழு, வட்ஜெமப் வாட்ஜுக் கலாசார ஆணையம் மற்றும் வாட்ஜுக் அபோரிஜினல் கார்ப்பரேஷன் ஆகியவற்றின் ஆலோசனையும் இந்த முடிவுக்கு ஆதாரமாக இருந்தது.
தரையில் ஊடுருவிச் சோதனை மேற்கொண்டதில், அந்த இடத்தில் மேலும் மனித எச்சங்கள் இல்லை என தெரியவந்ததாக ஆணையம் கூறியது. தேவாலயத்துக்குச் செல்லும் புதிய நடைபாதை மட்டும் தொடரும். அது அடக்கம் செய்யப்பட்ட இடத்தை பாதிக்காமல் அணுகலை மேம்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாலாங் என அழைக்கப்படும் எச்சங்கள் தொடர்பான நினைவிடப் பணிகள், வாட்ஜுக் பாரம்பரிய உரிமையாளர்களுடன் ஆலோசித்து மேற்கொள்ளப்படும். 1838 முதல் 1931 வரை ரோட்னெஸ்ட் தீவு பழங்குடியினருக்கான சிறைச்சாலையாக பயன்படுத்தப்பட்டது. அங்கு நினைவிடப் பணிகள் அடுத்த ஆண்டு தொடக்கத்திலும், முன்னாள் சிறைக் கட்டிடமான குவாட் பணிகள் இந்த ஆண்டின் பிற்பகுதியிலும் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.































