2001 அக்டோபர் 19ஆம் தேதி, கிறிஸ்துமஸ் தீவை நோக்கிச் சென்ற மீன்பிடிப் படகு, ஜாவா தீவுக்கு தெற்கே சர்வதேச கடற்பரப்பில் மூழ்கியது. சுமார் 20 மீட்டர் நீளமுடைய அந்தப் படகில் 400க்கும் மேற்பட்டோர் இருந்தனர். கடும் கடல் சீற்றத்தில் இயந்திரம் செயலிழந்ததைத் தொடர்ந்து படகு கவிழ்ந்து மூழ்கியது. 20 மணி நேரத்திற்கும் மேலாகி, இந்தோனேசிய மீன்பிடிப் படகுகள் 45 பேரை மீட்டன.
கான்பெரா நினைவிடத்தில் தொடரும் நினைவேந்தல்
கான்பெராவில் உள்ள வெஸ்டன் பூங்கா மற்றும் லேக் பர்லி கிரிஃபின் கரையில் அமைந்துள்ள நினைவிடத்தில் நிகழ்வு நடைபெற்றது. அங்கு உயிரிழந்த ஒவ்வொருவரையும் குறிக்கும் வகையில் 353 மரக் கம்பங்கள் நிறுவப்பட்டுள்ளன. ஒவ்வொரு கம்பத்தின் உயரமும் உயிரிழந்த நபரின் வயதை பிரதிபலிக்கிறது.
பலியானவர்களில் 100க்கும் மேற்பட்டோரின் பெயர்கள் இன்னும் பொதுவெளியில் வெளியிடப்படவில்லை. இதுவரை சுமார் 220 பேரின் பெயர்கள் கண்டறியப்பட்டு கம்பங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக நினைவிட நிர்வாகிகள் தெரிவித்தனர். முழுமையான நீதித்துறை விசாரணை நடைபெறாத நிலையில், SIEV X memorial service மனிதநேயம் மற்றும் அகதிகளுக்கான ஆதரவை வலியுறுத்தும் நிகழ்வாகவும் அமைந்தது.































