நான்கு முக்கிய கடல் வழித்தடங்கள்
கிழக்கு மத்தியதரைக் கடல் வழி துருக்கி, மத்திய கிழக்கு அல்லது வட ஆப்பிரிக்காவிலிருந்து கிரீஸ் நோக்கிச் செல்கிறது. மத்திய மத்தியதரைக் கடல் வழி வட ஆப்பிரிக்காவிலிருந்து இத்தாலி அல்லது மால்டாவை நோக்கியும், மேற்கு மத்தியதரைக் கடல் வழி மொரோக்கோ மற்றும் அல்ஜீரியாவிலிருந்து ஸ்பெயின் நோக்கியும் செல்கிறது. மேற்கு ஆப்பிரிக்கக் கடற்கரையிலிருந்து கேனரி தீவுகளை நோக்கிய அட்லாண்டிக் வழியும் இதில் அடங்கும்.
இந்த நான்கு வழித்தடங்களிலும் 2025ஆம் ஆண்டில் 190,000 முதல் 209,000 பேர் வரை கடத்தல் குற்றங்களின் இலக்காக இருந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. எனினும், இந்த வழிகளைப் பயன்படுத்திய அனைவரும் கடத்தப்பட்டவர்கள் அல்ல.
மத்திய மத்தியதரைக் கடல் வழியில் ஆய்வு செய்யப்பட்டவர்களில் 45 சதவீதம் பேர் 7,500 டாலருக்கும் அதிகமாகக் கட்டணம் செலுத்தியதாகத் தெரிவித்தனர். மேற்கு மத்தியதரைக் கடல் வழியில் 52 சதவீதம் பேர் 1,000 முதல் 5,000 டாலர் வரை செலுத்தியுள்ளனர். வடமேற்கு ஆப்பிரிக்க அட்லாண்டிக் வழியில் சுமார் 57 சதவீதம் பேர் 1,000 டாலருக்குக் குறைவாகச் செலுத்தியதாகக் கூறினர்.
UNODC migrant smuggling report படி, 57 சதவீதம் பேர் புறப்படுவதற்கு முன்பே முழுத் தொகையையும் செலுத்தினர். சுமார் நான்கில் ஒரு பகுதியினர் பயணத்தின் பல கட்டங்களில் வெவ்வேறு நபர்களுக்கு பணம் வழங்கினர். பணம் பெரும்பாலும் ரொக்கமாக செலுத்தப்பட்டதால், அதை சட்ட அமலாக்க அமைப்புகள் கண்காணிப்பது கடினமாகிறது.
2025ஆம் ஆண்டில் கடல் வழிகளில் புறப்பட்டவர்களில் 104,200 பேர் கடலில் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டதாகவும், 3,404 பேர் உயிரிழந்ததாக அல்லது காணாமல் போனதாகவும் அறிக்கை குறிப்பிட்டுள்ளது.






























