சிட்னி நகர மையத்திலிருந்து 45 கிலோமீட்டர் தொலைவிலும், பென்ரித் நகர மையத்திலிருந்து 18 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ள பேட்ஜரி’ஸ் க்ரீக் பகுதியில் இந்த விமான நிலையம் அமைந்துள்ளது. இது சிட்னியின் மாஸ்கட் விமான நிலையங்களைப் போல அல்லாமல், 24 மணி நேரமும் செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
புதிய விமான நிலையத்தின் முதல் பயணிகள் சேவை
பயணிகளுக்கான சோதனை நடவடிக்கைகள் காலை 8 மணிக்கு தொடங்கின. கோல்ட் கோஸ்ட்டிலிருந்து வரும் JQ363 விமானம் பிற்பகல் 3 மணிக்கு தரையிறங்க திட்டமிடப்பட்டது. மெல்போர்னுக்கான அடுத்த விமானம் மாலை 6 மணிக்கு புறப்படுகிறது.
Western Sydney International Airport-ன் தலைமை நிர்வாக அதிகாரி சைமன் ஹிக்கி, விமான நிலையம் வளர்ச்சியை கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். 2030களின் தொடக்கம் முதல் நடுப்பகுதி வரை ஆண்டுக்கு 1 கோடி பயணிகளை கையாளும் அளவுக்கு வளரலாம் என்றும், 2060களில் ஆண்டுக்கு 8.2 கோடி பயணிகள் திறனை எட்டலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
உள்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து அமைச்சர் கேத்தரின் கிங், இந்தத் திட்டம் பல தசாப்தங்களாக மேற்கொள்ளப்பட்ட முயற்சியின் விளைவு எனக் குறிப்பிட்டார். பிரதமர் அந்தோனி அல்பனீஸ், இது மேற்கு சிட்னி, சிட்னி, நியூ சவுத் வேல்ஸ் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு முக்கியமான நாள் எனத் தெரிவித்தார்.
விமான நிலையத்தை உருவாக்க சுமார் 10,000 தொழிலாளர்கள் பணியாற்றினர். செயல்பாடுகள் விரிவடையும் போது வளாகம் முழுவதும் 8,500 வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சரக்கு சேவைகள் ஏற்கனவே ஜூலை மாதம் தொடங்கியிருந்தன.






























