பின்லாந்து வெளிவிவகார அமைச்சகத்தின் தகவலின்படி இதுவரை சுமார் 2,200 பருவகால விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன. அவற்றில் 1,600 விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்ட நிலையில் சுமார் 1,400 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இதனால் பரிசீலிக்கப்பட்ட விண்ணப்பங்களில் பெரும்பாலானவை அனுமதி பெறவில்லை.
அதிகமான விண்ணப்பங்கள் தாய்லாந்தின் பாங்காக் நகரிலுள்ள பின்லாந்து தூதரகத்தின் மூலம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன. மேலும் வியட்நாம் நேபாளம் இந்தியா கென்யா மற்றும் கசகஸ்தான் போன்ற நாடுகளிலிருந்தும் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதற்கான முக்கிய காரணமாக, சில நிறுவனங்கள் தொழிலாளர் சட்டங்களின்படி தங்களது முதலாளி பொறுப்புகளை நிறைவேற்ற முடியாது என்ற சந்தேகமும் தொழிலாளர் சுரண்டல் அபாயம் இருப்பதாக அதிகாரிகள் கருதியதுமாகும். அண்மையில் பெர்ரி சேகரிப்பு துறையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளும் மதிப்பீட்டில் கருத்தில் கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025 பிப்ரவரி முதல் பின்லாந்தில் காட்டு பெர்ரி பறிப்பு பணிகள் பருவகால தொழிலாளர் சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டன. இதன் மூலம் வெளிநாட்டு பெர்ரி பறிப்போர் கட்டாயமாக வேலை ஒப்பந்தத்தின் கீழ் பணியாற்ற வேண்டும். மேலும், பருவகால வேலை விசா அல்லது அதற்கான குடியிருப்பு அனுமதி பெறுவதும் அவசியமாக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றம் தொழிலாளர் உரிமைகளை பாதுகாக்கவும், சுரண்டலைத் தடுக்கவும் அறிமுகப்படுத்தப்பட்டது.

































