தற்போது வேலை விபத்து அல்லது தொழில் நோய் காரணமாக பணியாற்ற முடியாதவர்களுக்கு முழுமையான குணமடைதல் அல்லது உடல்நிலை நிரந்தரமாக நிலைபெறும் (consolidation) வரை தினசரி நஷ்டஈடு வழங்கப்படுகிறது. ஆனால் புதிய விதிகளின்படி 2027 ஜனவரி 1 முதல் ஏற்படும் வேலை விபத்துகள் மற்றும் தொழில் நோய்களுக்கு இந்த நஷ்டஈடு அதிகபட்சமாக 4 ஆண்டுகள் மட்டுமே வழங்கப்படும்.
4 ஆண்டுகளுக்கும் மேலாக வேலை செய்ய இயலாத நிலை தொடர்ந்தால் அந்த நிலை நிரந்தர இயலாமை (Permanent Incapacity) என கருதப்படும். அதன் பின்னர் வேறு விதமான இழப்பீட்டு திட்டத்தின் கீழ் நபர் நிதி உதவி பெறுவார்.
மேலும், ஒருவர் நஷ்டஈடு பெற்று மீண்டும் வேலைக்கு திரும்பிய பின்னர், குறைந்தது ஒரு வருடம் பணிபுரிந்திருந்தால், பின்னர் மீண்டும் வேலை விபத்து அல்லது தொழில் நோயால் பாதிக்கப்பட்டால் குறிப்பிட்ட நிபந்தனைகளின் கீழ் மேலும் ஒரு முறை 4 ஆண்டுகள் வரை நஷ்டஈடு பெற முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாற்றம் பிரான்சின் சமூக பாதுகாப்பு செலவினங்களை கட்டுப்படுத்தவும், நீண்டகால வேலை நிறுத்த வழக்குகளுக்கான நிரந்தர இழப்பீட்டு நடைமுறையை தெளிவுபடுத்தவும் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.































