வாகனத்தைத் திரும்பக் கேட்டு தகராறு
கல்லக்குடி அருகே மால்வாய் சாலையில், சிறப்பு உதவி ஆய்வாளர் சோபியா தலைமையிலான போலீஸார் இரவு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, தாறுமாறாக இருசக்கர வாகனம் ஓட்டி வந்த கோவண்டாகுறிச்சி, செம்பிய தெருவைச் சேர்ந்த மாணிக்கத்தின் மகன் ராஜை பிடித்து விசாரித்தனர். அவர் அதிகளவில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியது தெரியவந்ததைத் தொடர்ந்து, போலீஸார் வழக்குப் பதிவு செய்து வாகனத்தைப் பறிமுதல் செய்தனர்.
பின்னர், காவல் நிலையத்தில் பாரா பணியில் இருந்த தலைமைக் காவலர் சிலம்புச்செல்வியிடம் ராஜ் தனது வாகனத்தைத் தருமாறு கேட்டு தகராறு செய்ததாக கூறப்படுகிறது. அவர் தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்துக் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் போலீஸார் தெரிவித்தனர்.
அச்சமடைந்த சிலம்புச்செல்வி அங்கிருந்து வெளியேறிய நிலையில், ராஜ் காவல் நிலையத்தில் இருந்த சாவியை எடுத்துக்கொண்டு தனது இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. Lalgudi police station knife threat சம்பவம் தொடர்பாக சிலம்புச்செல்வி அளித்த புகாரின் பேரில், கல்லக்குடி போலீஸார் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து ராஜை கைது செய்தனர். பின்னர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
































