திரைப்படங்களிலும் தொலைக்காட்சி தொடர்களிலும் கோவில் காட்சிகளில் கருப்பசாமி தொடர்பான காட்சிகள் இடம்பெறுவது வழக்கமாக உள்ளது. குறிப்பாக, சீரியல்களில் கருப்பசாமி அருள் வந்து ஆடுவது போன்ற காட்சிகள் அடிக்கடி காட்டப்படுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், பலமுறை அந்த வேடத்தில் நடித்திருந்த ஸ்ரீகுமார் தனது முடிவை தெரிவித்துள்ளார்.
ஸ்ரீகுமார் கருப்பசாமி வேடம் குறித்து கூறியது
“இனி கருப்பு கெட்டப்பில் நடிக்க மாட்டேன். சின்னத்திரையில் அதிகமாக அந்த வேடத்தில் நடித்தது நானாகத்தான் இருப்பேன். அதை பலமுறை செய்துவிட்டதாகத் தோன்றுகிறது” என்று அவர் கூறியுள்ளார். மேலும், தனக்கு நம்பிக்கை இல்லாத ஒரு விஷயத்தை ஏன் மிகைப்படுத்த வேண்டும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
“எனக்கு இயேசுவை பிடிக்கும். இயேசுவை நம்புகிறேன் என்பதை வெளிப்படையாகச் சொல்வேன். மற்றவர்களின் நம்பிக்கையில் நான் தலையிடவில்லை. ஆனால் எனக்கு நம்பிக்கை இல்லாத விஷயத்தை நான் ஏன் மிகைப்படுத்த வேண்டும்?” என்றும் ஸ்ரீகுமார் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, இதே வேடத்தில் அவர் நடித்தபோது சிலர் விமர்சனம் செய்திருந்தனர். நடிகராக வந்த பிறகு இயக்குநர் வழங்கும் எந்தக் கதாபாத்திரத்தையும் ஏற்று, தனது முழு நடிப்பையும் வழங்குவது தான் வேலை என்று அப்போது அவர் கூறியிருந்தார். தற்போது அந்த நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘வானத்தைப்போல’ தொடரில் ஸ்ரீகுமார் கருப்பசாமி வேடத்தில் பலமுறை நடித்தார். பின்னர், ஜீ தமிழில் ஒளிபரப்பான ‘கெட்டிமேளம்’ தொடரிலும் அதேபோன்ற கதாபாத்திரம் அவருக்கு வழங்கப்பட்டது. இரு தொடர்களும் தற்போது முடிவடைந்துள்ளன.
அடுத்த தொடரில் நடிப்பதற்கு முன்பே தனது நிலைப்பாட்டை அவர் தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது. அவரது முடிவு எதிர்கால வாய்ப்புகளில் சாதகமா அல்லது பாதகமா என்பது குறித்து சிலர் கேள்வி எழுப்புகின்றனர். அதே நேரத்தில், தனது நம்பிக்கைக்கு ஏற்ப அவர் முடிவு எடுத்திருப்பதாகவும் சிலர் கருத்து தெரிவிக்கின்றனர்.



























