இலங்கை அணிக்கு எதிராக இந்தியா அபார வெற்றி
முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா, 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 216 ஓட்டங்களைப் பெற்றது. ஸ்மிருதி மந்தனா 45 பந்துகளில் 79 ஓட்டங்களை விளாசினார். ரிச்சா கோஷ் ஆட்டமிழக்காமல் 49 ஓட்டங்களைச் சேர்த்தார்.
மந்தனா மற்றும் ஷஃபாலி வர்மா இணைந்து முதல் ஆறு ஓவர்களில் 66 ஓட்டங்களைப் பெற்றனர். அரையிறுதியில் சதம் அடித்திருந்த ஷஃபாலி, இலங்கை அணித் தலைவி சமரி அத்தபத்துவின் பந்துவீச்சில் மூன்று சிக்ஸர்களை அடித்தார். அவர் அரைசதத்தை நெருங்கிய நிலையில் ஆட்டமிழந்தார்.
இலங்கையின் பதிலடி ஆட்டம் தொடக்கம் முதலே தடுமாறியது. அணித் தலைவி சமரி அத்தபத்து அதிகபட்சமாக 29 ஓட்டங்களைப் பெற்றார். இலங்கை அணி 15.4 ஓவர்களில் 69 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
இந்தியாவின் தீப்தி சர்மா 6 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஷஃபாலி வர்மா, ஸ்ரீ சரணி, ஸ்ரேயங்கா பாட்டில் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளைப் பெற்றனர். இதனால் இந்தியா 147 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்று தங்கப் பதக்கத்தை கைப்பற்றியது. Sri Lanka women silver medal பெற்ற நிலையில், வெண்கலப் பதக்கத்தை பாகிஸ்தான் வென்றது.





























