திருமண தகவல் மையத்தில் நடந்த கொடூரம்
வேலூர் சத்துவாச்சாரி பேஸ்-2 பகுதியைச் சேர்ந்த ஹரிபிரசாத், ஆவின் பாலகத்தில் ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார். இவருக்கும் கீர்த்திகா (27) என்பவருக்கும் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதாகக் கூறி, ஹரிபிரசாத் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். கடந்த இரு தினங்களுக்கு முன்பு அவர் கீர்த்திகாவைத் தாக்கியதாகவும், இதனால் அவர் கோபித்துக்கொண்டு தாய் வீட்டுக்குச் சென்றதாகவும் கூறப்படுகிறது.
சத்துவாச்சாரி ஆர்.டி.ஓ. சாலை அருகே உள்ள திருமண தகவல் மையத்தில் கீர்த்திகாவின் தாய் பணியாற்றி வந்தார். சம்பவ நாளில் தாயுடன் அங்கு சென்றிருந்த கீர்த்திகாவை, மதியம் 12 மணியளவில் அரிவாளுடன் வந்த ஹரிபிரசாத் தாக்கியுள்ளார். கீர்த்திகா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரைக் காப்பாற்ற முயன்ற தாயும் காயமடைந்தார்.
இதையடுத்து ஹரிபிரசாத் சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் சரணடைந்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனர். கீர்த்திகாவின் உடல் வேலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. Vellore woman murder குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.





























