விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. சூர்யாவின் வழக்கமான ஆக்ஷன் கதைக்களத்திலிருந்து மாறுபட்டு, குடும்ப உறவுகள், காதல் மற்றும் சென்டிமென்ட் ஆகியவற்றை மையமாகக் கொண்டு படம் உருவாகியுள்ளது.
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் ஓடிடி வெளியீடு செப்டம்பர் 11
இந்தப் படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. அதன்படி, செப்டம்பர் 11ஆம் தேதி முதல் படத்தை அந்தத் தளத்தில் பார்க்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திரையரங்கு வெளியீட்டுக்குப் பிறகு ஓடிடி வருகைக்காக காத்திருந்த ரசிகர்களுக்கு இது முக்கியமான அப்டேட்டாக அமைந்துள்ளது.
படத்தில் சூர்யா, சஞ்சய் விஸ்வநாத் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவர் மிகப்பெரிய தொழிலதிபராகவும், சர்வதேச அளவிலான துப்பாக்கிச் சுடுதல் போட்டிகளில் பங்கேற்கும் வீரராகவும் காட்டப்படுகிறார். 40 வயதைக் கடந்தும் திருமணம் செய்யாமல் இருக்கும் அவருக்கு, திருமணம் செய்து வாரிசை உருவாக்க வேண்டும் என குடும்பத்தினர் அழுத்தம் கொடுக்கின்றனர்.
தாயை திருப்திப்படுத்துவதற்காக வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளும் சஞ்சயைச் சுற்றியே அடுத்தடுத்த பிரச்சினைகள் நகர்கின்றன. அவரை காதலிக்கும் பெண்ணாக மமிதா பைஜூ நடித்துள்ளார். திருமணத்தை சஞ்சய் மறுக்கும் நிலையில், கதையில் எதிர்பாராத திருப்பம் ஏற்படுகிறது.
படத்தில் ராதிகா சரத்குமார், ரவீணா, நாசர், காளி வெங்கட், ஹர்ஷா மற்றும் சுனில் ரெட்டி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ‘லக்கி பாஸ்கர்’ படத்தை இயக்கிய வெங்கி அட்லூரி, இந்தப் படத்தை எழுதி இயக்கியுள்ளார்.
முன்னதாக வெளியான தகவலின்படி, திரைப்படம் ரூ.270 கோடிக்கும் அதிகமான வசூலைப் பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு முன் வெளியான ‘கருப்பு’ படமும் ரூ.300 கோடி வசூலை கடந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், விஸ்வநாத் அண்ட் சன்ஸ் ஓடிடி வெளியீடு தேதியை ரசிகர்கள் எதிர்பார்த்து வந்தனர்.



























