31 வயதான யுபுன் வெளியிட்டுள்ள உணர்வுபூர்வமான அறிக்கையில் தனது விளையாட்டு வாழ்க்கையை எந்த வருத்தமும் இன்றி நிறைவு செய்கிறேன் என்றும் தனது நாட்டிற்காக இயன்ற அனைத்தையும் செய்துள்ளேன் என்றும் குறிப்பிட்டுள்ளார். தனது வெற்றிப் பயணத்தில் துணைநின்ற பெற்றோர், பள்ளிகள், இலங்கை இராணுவத்தின் SLEME படைப்பிரிவு இலங்கை தடகள சம்மேளனம் இத்தாலிய பயிற்சியாளர் கிளாவ்டியோ லிச்சியார்டெல்லோ தலைமையிலான பயிற்சிக் குழு மற்றும் தன்னை ஆதரித்த இலங்கை மக்களுக்கு அவர் நன்றியும் தெரிவித்தார்.Sri Lanka News
2022 ஜூலை 3ஆம் தேதி சுவிட்சர்லாந்தின் லா ஷோ டு ஃபோன்ஸ் (La Chaux-de-Fonds) நகரில் நடைபெற்ற போட்டியில் 9.96 விநாடிகளில் 100 மீற்றர் ஓட்டத்தை நிறைவு செய்து 10 விநாடிக்குள் ஓடிய முதல் தெற்காசிய வீரர் என்ற வரலாற்றை யுபுன் படைத்தார். அதே ஆண்டில் பேர்மிங்காமில் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் 100 மீற்றர் ஓட்டத்தில் வெண்கலப் பதக்கம் வென்று இலங்கைக்கு வரலாற்றுச் சாதனையையும் பெற்றுத்தந்தார். மேலும் டோக்கியோ ஒலிம்பிக்கிலும் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தினார்.
எனினும் தனது ஓய்வு முடிவுக்குப் பின்னால் இலங்கையில் தொழில்முறை தடகள வீரர்கள் எதிர்கொள்ளும் சவால்களும் காரணமாக இருந்ததாக யுபுன் சுட்டிக்காட்டியுள்ளார். இது குறித்து விரிவான தகவல்களை எதிர்காலத்தில் வெளியிடுவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். யுபுன் அபேகோனின் ஓய்வு இலங்கை தடகள வரலாற்றில் ஒரு பொற்கால அத்தியாயத்தின் நிறைவாக விளையாட்டு ஆர்வலர்களால் பார்க்கப்படுகிறது.





























