குற்றம் மற்றும் விசாரணை
45 வயதான சுல்பத்மேந்திரா, ஆகஸ்ட் 31ஆம் தேதி பிலியந்தலை, தும்போவில பகுதியில் தொழிலதிபர் ஒருவருக்குச் சொந்தமான வீட்டில் படுக்கையில் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.
பொலிஸாரின் தகவலின்படி, அந்த தொழிலதிபருடன் சுல்பத்மேந்திரா காதல் உறவில் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 30ஆம் தேதி பட்டரமுல்லையில் அவர் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சிக்குப் பின்னர், ஆகஸ்ட் 31ஆம் தேதி அதிகாலை அந்த வீட்டுக்குச் சென்றதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அங்கு அறையொன்றில் உறங்கிய அவரை மதியம் 12.45 மணியளவில் எழுப்ப முயன்றபோது பதில் கிடைக்கவில்லை. பின்னர் 1990 சுவசெரிய அம்புலன்ஸ் சேவை அழைக்கப்பட்டது. மருத்துவப் பணியாளர்கள் அவர் உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தினர்.
அவர் உறங்கியிருந்த படுக்கை விரிப்பில் இரத்தக் கறை காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து தொழிலதிபர் பிலியந்தலை பொலிஸில் முறைப்பாடு செய்ததுடன், சுல்பத்மேந்திராவின் தாயாரும் தனியான முறைப்பாடு அளித்துள்ளார்.
கெஸ்பேவ நீதவான் நீதிமன்ற நடவடிக்கைகளைத் தொடர்ந்து, பதில் நீதவான் சம்பவ இடத்தையும் உயிரிழந்தவரின் உடலையும் பார்வையிட்டார். நீதிமன்ற உத்தரவின் பேரில் களுபோவில போதனா வைத்தியசாலையில் நீதிமருத்துவ அதிகாரியால் பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டது.
பிரேதப் பரிசோதனையில் திறந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. உடலில் வெளிப்புற அல்லது உட்புற காயங்கள் எதுவும் காணப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலதிக பரிசோதனைக்காக மாதிரிகளும் உடற்பாகங்களும் அரச இரசாயன பகுப்பாய்வாளரிடம் அனுப்பப்பட்டுள்ளன.
சுல்பத்மேந்திரா மாடலிங் மற்றும் அழகிப் போட்டித் துறையில் அறியப்பட்டவராவார். 2021ஆம் ஆண்டு முன்னாள் திருமதி உலக அழகி கரோலின் ஜூரி மற்றும் திருமதி இலங்கை புஷ்பிகா டி சில்வா தொடர்பான சர்ச்சையிலும் அவர் குறிப்பிடப்பட்டிருந்தார். மரணத்துக்கான துல்லியமான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.































