சரிகமா கோரும் பதிப்புரிமை பெற்ற பாடல்களை இளையராஜா உரிமை கொண்டாடவோ, பயன்படுத்தவோ அல்லது பிறர் பயன்படுத்த உரிமம் வழங்கவோ கூடாது என்று டெல்லி உயர் நீதிமன்றம் கடந்த பிப்ரவரியில் இடைக்காலத் தடை விதித்ததாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாடல் உரிமை தொடர்பான சரிகமா புகார்
ஸ்பாட்டிஃபை, யூடியூப் உள்ளிட்ட தளங்களில் சரிகமா உரிமம் கொண்ட பாடல்கள் பயன்படுத்தப்பட்ட நிலையில், அவற்றின் உரிமை தமக்கே உரியது என்று இளையராஜா கோரியதாக நிறுவனம் குற்றம்சாட்டியுள்ளது. இதன் மூலம் நீதிமன்ற உத்தரவு மீறப்பட்டதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
‘முரட்டுக்காளை’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘பொதுவாக என் மனசு தங்கம்’ பாடல் தொடர்பாக, ‘பியாண்ட் பிக்சர்ஸ்’ நிறுவனத்துக்கு எதிராக இளையராஜா ஜூன் 23-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததாகவும் சரிகமா தெரிவித்துள்ளது. டெல்லி உயர் நீதிமன்ற வழக்கும் அமலில் உள்ள தடை உத்தரவும் மறைக்கப்பட்டு, பாடலைப் பயன்படுத்த இடைக்காலத் தடை பெறப்பட்டதாக நிறுவனம் கூறியுள்ளது. பின்னர் உரிமம் மற்றும் நிலுவை வழக்கு குறித்து விளக்கம் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்தத் தடை நீக்கப்பட்டதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையாக இளையராஜாவை சிறையில் அடைக்கவும், அவரது சொத்துகளைப் பறிமுதல் செய்து விற்று கிடைக்கும் தொகையை சரிகமாவிடம் ஒப்படைக்கவும் நிறுவனம் கோரியுள்ளது. Ilaiyaraaja copyright case மனுவை நீதிபதி அனுப் ஜெயராம் பம்பானி விசாரித்து, இளையராஜா பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.





























