கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் காவல் எல்லைக்குட்பட்ட மேட்டுக்குடியிருப்பைச் சேர்ந்தவர் அய்யப்பன். இவருக்குச் சொந்தமான இரண்டு சர்வே எண்களில் உள்ள 10 சென்ட் நிலத்தை, தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த அரிகிருஷ்ணனுக்கு ரூ.40 லட்சத்துக்கு விற்பனை செய்துள்ளார். விற்பனைப் பத்திரத்தில் ஒரு சர்வே எண்ணை மட்டும் குறிப்பிட்டதாகக் கூறப்படுகிறது.
பின்னர் அரிகிருஷ்ணன், ராமசந்திரன் என்ற ரியல் எஸ்டேட் புரோக்கர் மூலம் அந்த நிலத்தை வனஜாவுக்கு மறுவிற்பனை செய்துள்ளார். நிலத்தை காலி செய்து வனஜாவிடம் ஒப்படைக்குமாறு ராமசந்திரன், அய்யப்பனிடம் வலியுறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
வீட்டை இடித்ததாக புகார்
நிலத்தை ஒப்படைக்க மறுத்த அய்யப்பன், தனது பெற்றோரை அங்குள்ள பழைய வீட்டில் தங்க வைத்திருந்தார். அவரது தந்தை சுயம்பு மூலம் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையிலும் வழக்கு தொடரப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த ராமசந்திரன், தனது ஆதரவாளர்களுடன் கடந்த 22-ம் தேதி ஜே.சி.பி. இயந்திரத்துடன் சென்று வீட்டை இடிக்கத் தொடங்கியதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்துக்குச் சென்ற அய்யப்பனை ராமசந்திரனும் கூட்டாளிகளும் மரத்தில் கட்டி வைத்து தாக்கியதுடன், வீட்டை முழுமையாக இடித்ததாக கூறப்படுகிறது. மேலும், நிலத்தை வனஜாவிடம் ஒப்படைக்குமாறு மிரட்டியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் பரவியது.
Kanyakumari land dispute குறித்து அய்யப்பன் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸார், சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.





























