2018ஆம் ஆண்டு வெளியான காணொளி தொடர்பான வழக்கு
பாரதிய ஜனதா கட்சியின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு, விகாஷ் பாண்டேவுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாகக் குற்றம்சாட்டி, 2018ஆம் ஆண்டு மே மாதம் துருவ் ராட்டி ஒரு காணொளியை வெளியிட்டிருந்தார். ‘BJP IT Cell Part II’ என்ற தலைப்பில் வெளியான அந்தக் காணொளியில் தன்னைப் பற்றி பொய்யான மற்றும் அவதூறான கூற்றுகள் கூறப்பட்டதாக விகாஷ் பாண்டே குற்றம்சாட்டினார்.
ராட்டியின் சமூக ஊடகக் கணக்கில் பகிரப்பட்ட காணொளியை, அப்போது டெல்லி முதலமைச்சராக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் பகிர்ந்திருந்தார். இதையடுத்து ராட்டி மற்றும் கெஜ்ரிவால் ஆகிய இருவருக்கும் எதிராக பாண்டே அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் ராட்டிக்கு ஏற்கெனவே கடந்த மாதம் 17ஆம் தேதி வாரன்ட் பிறப்பிக்கப்பட்டிருந்தது. சம்மன் வழங்கச் சென்றபோது அவரது வீடு பூட்டியிருந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. கடந்த 31ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட புதிய வாரன்ட்டை, ராட்டியின் ஹரியானா வீட்டு முகவரிக்கு அனுப்புமாறு நீதிபதி கேட்டுக்கொண்டார்.
ராட்டி வழக்கமாக ஆஸ்திரியாவில் வசிப்பதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்தார். சம்மன் வழங்கப்படுவதை உறுதி செய்து, வழக்கு விசாரணையை விரைவுபடுத்த நீதிமன்றம் தலையிட வேண்டும் என்று பாண்டே தரப்பு வழக்கறிஞர் கோரினார். இந்நிலையில், Dhruv Rathee non-bailable warrant உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

































