கொளாநல்லியைச் சேர்ந்த வள்ளியம்மாள் வீட்டில் தனியாக வசித்து வந்தார். கடந்த 15ஆம் தேதி மாலை காரில் வந்த ஆண் மற்றும் பெண், தங்களை செவிலியர் மற்றும் மருத்துவ உதவியாளர் என அறிமுகப்படுத்திக் கொண்டனர். அனைவருக்கும் இலவச மருத்துவத் திட்டத்தின் கீழ் பரிசோதனை செய்ய வந்ததாகக் கூறி, வள்ளியம்மாளிடம் போலியாக மருத்துவப் பரிசோதனை செய்துள்ளனர்.
மயக்க ஊசி செலுத்தி தங்கச் சங்கிலி பறிப்பு
கால் வலிக்கு ஊசி செலுத்துவதாகக் கூறி அவருக்கு மயக்க ஊசி செலுத்தியதாக கூறப்படுகிறது. வள்ளியம்மாள் மயங்கிய நிலையில், அவரது கழுத்தில் இருந்த 4 பவுன் தங்கச் சங்கிலியை எடுத்துக் கொண்டு இருவரும் தப்பிச் சென்றுள்ளனர். மயக்கம் தெளிந்த பின்னர் நடந்ததை அறிந்த வள்ளியம்மாள் போலீஸில் புகார் அளித்தார்.
வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீஸார், ஈரோடு மரப்பாலம் பகுதியைச் சேர்ந்த சுந்தர் ராஜன் (26), தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியைச் சேர்ந்த நிசாலினி (24) ஆகியோரை கைது செய்தனர். வெள்ளை நிற கோட் அணிந்து காரில் சென்று திருட்டில் ஈடுபட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
சி.சி.டி.வி. பதிவுகளின் அடிப்படையில் தேடப்பட்ட இருவரும், நேற்று காலை 9 மணியளவில் நடுப்பாளையம் அருகே அண்ணாமார் கோயில் பகுதியில் மலையம்பாளையம் போலீஸார் நடத்திய சோதனையில் சிக்கினர். அவர்களிடமிருந்து 3 பவுன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இருவரின் குற்றப் பின்னணி குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த Erode gold chain robbery வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.































