பிரான்ஸ் அரசாங்கத்தின் கோரிக்கையின் பேரில் தயாரிக்கப்பட்ட செலவின ஆய்வு அறிக்கையில் மாணவர்களுக்கான APL வீட்டு உதவியைக் கணக்கிடும்போது அவர்களது பெற்றோரின் வருமானத்தையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நடைமுறையில், 25 வயது வரை மாணவர்கள் பெற்றோரின் வரிக் குடும்பத்துடன் இணைந்திருந்தாலும் அவர்களுக்கான APL உதவியைக் கணக்கிடும்போது பெற்றோரின் வருமானம் நேரடியாகக் கருத்தில் கொள்ளப்படுவதில்லை. இந்த நடைமுறையையே மாற்ற வேண்டும் என நிதி மற்றும் சமூக விவகாரங்களுக்கான ஆய்வு அமைப்புகள் பரிந்துரைத்துள்ளன.
2021ஆம் ஆண்டின் தரவுகளின்படி குறைந்தது ஒரு மாணவர் APL உதவி பெற்ற சுமார் 7 இலட்சம் குடும்பங்கள் இருந்தன. ஒரு பயனாளருக்கு சராசரியாக மாதம் 200 யூரோ அளவில் உதவி வழங்கப்பட்டதாகவும் இதற்காக மொத்தம் 1.65 பில்லியன் யூரோ செலவிடப்பட்டதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பெற்றோரின் வருமானத்தை கணக்கில் எடுத்துக்கொள்ளும் புதிய முறை அமல்படுத்தப்பட்டால் சுமார் 3 இலட்சத்து 10 ஆயிரம் குடும்பங்களுக்கு கிடைக்கும் உதவித் தொகை குறையக்கூடும். இவர்களில் சுமார் 2 இலட்சம் பேர் வீட்டு உதவியை முழுமையாக இழக்க நேரிடலாம். இதன் மூலம் ஆண்டுக்கு சுமார் 550 மில்லியன் யூரோ அரச செலவைக் குறைக்க முடியும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தைத் தயாரிக்கும்போது இந்த யோசனையை ஏற்க வேண்டாம் என மாணவர் அமைப்புகள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளன.
மாணவர்களின் பொருளாதார சுயாதீனத்தையும் வீட்டு வசதியையும் இந்த மாற்றம் கடுமையாகப் பாதிக்கக்கூடும் என மாணவர் சங்கங்கள் எச்சரித்துள்ளன. குறிப்பாக குடும்பத்தினரிடமிருந்து நிதி உதவி பெற முடியாத மாணவர்கள் அதிகம் பாதிக்கப்படலாம் என அவை சுட்டிக்காட்டியுள்ளன.

































