கவுகாத்தியைச் சேர்ந்த ராமானுஜ், தனது மனைவி ரியாவைக் கொலை செய்த பின்னர், அவரது தலையை பாலிதீன் பையில் வைத்து பிரிட்ஜில் மறைத்ததாக கூறப்படுகிறது. அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் வீட்டைச் சோதனையிட்ட போலீஸார், ரியாவின் உடலையும் தலையையும் மீட்டனர். பின்னர் ராமானுஜ் கைது செய்யப்பட்டார்.
போலீஸ் வாகனத்தில் இருந்து தப்பிக்க முயன்றபோது விபரீதம்
விசாரணையில், மனைவி தன்னை ஏமாற்றியதாகவும், வேறு ஒருவருடன் தொடர்பில் இருந்ததாகவும் ராமானுஜ் தெரிவித்ததாக போலீஸார் கூறினர். கடந்த 8ஆம் தேதி குற்றம் நடந்த இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, கொலை குறித்து வருத்தமோ மன்னிப்பு கோரும் எண்ணமோ இல்லை என்று அவர் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. சிறையில் இருந்து வெளியே வந்தால், தனது மனைவியின் ‘சுகர் டாடி’ எனக் குறிப்பிட்ட நபரையும் கொலை செய்வேன் என்றும் அவர் மிரட்டியதாக தெரிவிக்கப்பட்டது.
கொலை நடந்தபோது ராமானுஜ் குடிபோதையில் இருந்ததாக போலீஸார் தெரிவித்தனர். வீட்டில் இருந்து காலி மது பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
இன்று அதிகாலை, கவுகாத்தி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை முடிந்த பிறகு, அவரை ஹதிகான் காவல் நிலையத்துக்கு போலீஸார் அழைத்துச் சென்றனர். நரகசுர் பஹார் அருகே அவர் போலீஸாரைத் தாக்கிவிட்டு ஓடும் வாகனத்தில் இருந்து குதித்தார். பள்ளத்தில் விழுந்து பலத்த காயமடைந்த அவரை போலீஸார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். Guwahati murder case-ல் கைது செய்யப்பட்ட நபர் உயிரிழந்தது தொடர்பாகவும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.































