வர்த்தகம், தளவாடம் மற்றும் கடல்சார் சேவைகள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, தகவல் தொழில்நுட்பம் மற்றும் வணிகச் செயல்முறை சேவைகள், சுற்றுலா, மேம்பட்ட உற்பத்தி, கனிம அடிப்படையிலான தொழில்கள் மற்றும் படைப்புத் துறை உள்ளிட்ட பல துறைகளில் இலங்கைக்கு முதலீட்டு வாய்ப்புகள் இருப்பதாக அவர் கூறினார். எனினும், உற்பத்தித் திறனை விரைவாக உயர்த்தும் வாய்ப்பு காரணமாக விவசாயம் முன்னிலையில் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
உற்பத்தித் திறனை உயர்த்தும் வாய்ப்பு
நாட்டின் பெரும்பாலான முக்கிய விவசாயப் பயிர்களின் உற்பத்தித் திறன், அவற்றின் முழுத் திறனைவிட 50 சதவீதத்துக்கும் அதிகமாகக் குறைவாக உள்ளது. அதேவேளை, சுமார் 3.3 மில்லியன் ஹெக்டேயர் நிலம் விவசாயத்துக்காகப் பயன்படுத்தப்படுகிறது.
ஒப்பீட்டளவில் எளிய தொழில்நுட்பங்களையும் இலக்குவைத்த முதலீடுகளையும் பயன்படுத்தினால், பல பகுதிகளில் உற்பத்தியை இரட்டிப்பாக்க முடியும் என பிரதி அமைச்சர் தெரிவித்தார். அடுத்த மூன்று ஆண்டுகளில் விவசாய நிலத்தின் கணிசமான பகுதியை குறைந்தளவு முதலீட்டில் மாற்றியமைக்க முடியும் என்றும், இதன் மூலம் விவசாய உற்பத்தியின் சந்தை மதிப்பு மூன்று மடங்கு அல்லது அதற்கு மேல் உயரக்கூடும் என்றும் அவர் கூறினார்.
உயிரியல் முறையில், நிலைத்தன்மையுடன், முழுமையான தடமறிதலுடன் தயாரிக்கப்படும் பொருட்களுக்கான உலகளாவிய கேள்வி அதிகரித்து வருவது இந்த வாய்ப்பை மேலும் வலுப்படுத்துகிறது. அதிகப்படியான மூலதனம் கொண்ட முதலீட்டாளர்கள் வங்கி வைப்புகள் மற்றும் திறைசேரி உண்டியல்களுக்கு அப்பால் விவசாயத் துறை மாற்றத்தையும் பரிசீலிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
ஏற்றுமதி வளர்ச்சியும் மதிப்புச் சங்கிலி சீர்திருத்தமும்
ஏற்றுமதி அபிவிருத்திச் சபைத் தரவுகளின்படி, 2025ஆம் ஆண்டில் தேங்காய் மற்றும் தேங்காய் சார்ந்த பொருட்களின் ஏற்றுமதி சுமார் 43 சதவீதம் உயர்ந்து 1.23 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியது. “சவால் கேள்வியில் இல்லை; உற்பத்தித் திறன், உற்பத்தி அளவு மற்றும் மதிப்புச் சங்கிலியில் உள்ள திறனின்மைகளில்தான் உள்ளது” என அபேசிங்க தெரிவித்துள்ளார்.
ஏற்றுமதியாளர்கள் இடைத்தரகர்களை மட்டுமே சார்ந்திருக்காமல், பின்நிலை ஒருங்கிணைப்பில் முதலீடு செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார். விவசாயிகளை இணைக்கும் ஒப்பந்த முறைகள், கூட்டுறவுச் சங்கங்கள், மீள்கொள்முதல் ஒப்பந்தங்கள் மற்றும் தொழில்நுட்பக் கூட்டாண்மைகள் மூலம் தரம், தொடர்ச்சியான விநியோகம் மற்றும் உற்பத்தியை மேம்படுத்த முடியும் என அவர் விளக்கினார்.
பயன்படுத்தப்படாத அரச பெருந்தோட்ட நிலங்கள் மற்றும் சொத்துகள் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்காகத் திறக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். “இலங்கையிடம் நிலமும் விவசாயிகளும் உலகளாவிய கேள்வியும் உள்ளன; இப்போது தேவை முதலீடு, தொழில்நுட்பம், ஒழுங்கமைப்பு மற்றும் வலுவான கூட்டாண்மைகள்” என பிரதி அமைச்சர் கூறினார்.






























