தூத்துக்குடி மூன்றாவது மைல் பசும்பொன் நகர் பகுதியைச் சேர்ந்த இசக்கி ராஜா, தனது கட்சி நிர்வாகி இசக்கிராஜ் வாங்கிய 5 சவரன் தங்கச் செயின் போலி எனத் தெரியவந்ததைத் தொடர்ந்து வேலவன் ஜுவல்லர்ஸ் மீது புகார் அளித்திருந்தார். மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்களிலும் நகைகளைப் பரிசோதிக்கக் கோரி மனுக்கள் அளிக்கப்பட்டன.
கைதுக்குப் பிறகு காவல் நிலையம் முன்பு திரண்ட ஆதரவாளர்கள்
இதையடுத்து, பணம் கேட்டு மிரட்டியதாகவும் அவதூறான கருத்துகளைப் பரப்பியதாகவும் வேலவன் ஜுவல்லர்ஸ் நிறுவனம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. வணிகர் சங்க நிர்வாகிகளும் இசக்கி ராஜா மீது நடவடிக்கை கோரி மனு அளித்தனர். பின்னர் அவர் வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார்.
கைது தகவலறிந்த கட்சி நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் தென்பாகம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். மருத்துவப் பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டபோது வாகனத்தை மறித்து கோஷங்கள் எழுப்பினர். பின்னர் முதல் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சுமதி முன்பு ஆஜர்படுத்தப்பட்ட இசக்கி ராஜாவை அக்டோபர் 6-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது.
அவர் மீது பொய் வழக்கு பதிவு செய்ததாகக் கூறி நீதிமன்றம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட ஆதரவாளர்களை போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி கலைக்க முயன்றனர். வாக்குவாதம் ஏற்பட்டதைத் தொடர்ந்து லேசான தடியடி நடத்தி கூட்டம் கலைக்கப்பட்டது. Isakki Raja arrested சம்பவத்தையடுத்து, அவர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மதுரை மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.


































