புதிய சட்டத்தின் கீழ், ஒரு வெளிநாட்டவர் தேவையான சட்ட அனுமதி அல்லது உரிமம் இல்லாமல் நேரடியாகவோ மறைமுகமாகவோ வணிகம் தொழில் சேவை அல்லது பிற பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடுவது தடை செய்யப்பட்டுள்ளது. மற்றொருவரின் பெயர் அல்லது நிறுவனத்தை முன்னிலைப்படுத்தி உண்மையான வணிக நடவடிக்கையை மறைப்பதும் இதில் அடங்கும்.
சட்டத்தின் Article 2-ஐ மீறுவோர் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டால் 1 முதல் 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். அத்துடன் KD 10,000 முதல் KD 100,000 வரை அபராதம் அல்லது சட்டவிரோத நடவடிக்கையின் மூலம் பெறப்பட்ட மொத்த இலாபத்திற்கு சமமான தொகை, இவற்றில் அதிகமான தொகை அபராதமாக விதிக்கப்படலாம். நீதிமன்றம் சிறை மற்றும் அபராதம் இரண்டையும் அல்லது அவற்றில் ஒன்றையும் விதிக்க முடியும்.
ஒரே வழக்கில் பலர் சம்பந்தப்பட்டிருந்தாலோ அல்லது பல சட்டவிரோத நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தாலோ அபராதத் தொகை அதற்கேற்ப பல மடங்காக அதிகரிக்கப்படலாம்.
சட்டவிரோத நடவடிக்கை குறித்து தெரிந்திருந்தும் அதைத் தடுக்கத் தவறிய நிறுவனத்தின் உண்மையான நிர்வாகப் பொறுப்பாளர்களும் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படலாம். நிறுவனத்தின் பெயரில் குற்றம் மேற்கொள்ளப்பட்டால் சட்ட நிறுவனத்திற்கும் பொறுப்பு ஏற்படலாம்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் commercial concealment மூலம் பெறப்பட்ட பணம் மற்றும் இலாபங்களை பறிமுதல் செய்யவும் சட்டம் வழிவகுக்கிறது. மேலும், இறுதி தீர்ப்புக்குப் பின்னர் 5 ஆண்டுகளுக்குள் மீண்டும் இதே குற்றத்தில் ஈடுபட்டால் தண்டனை இரட்டிப்பாக்கப்படும்.
Commercial concealment குற்றத்தை கண்டுபிடிக்க அதிகாரிகளுக்கு முக்கிய ஆதாரங்களுடன் தகவல் வழங்குபவர்களுக்கு அவர்கள் குற்றத்தில் சம்பந்தப்படாதவர்களாக இருந்தால் வசூலிக்கப்பட்ட அபராதத்தின் 10% வரை நிதி வெகுமதி வழங்கப்படலாம். இறுதி குற்றத்தீர்ப்பு கிடைத்திருக்க வேண்டும் என்பது இதற்கான நிபந்தனைகளில் ஒன்றாகும்.
இந்த நடவடிக்கை குவைத்தில் மற்றொருவரின் பெயர் அல்லது உரிமத்தை பயன்படுத்தி சட்டவிரோதமாக வணிகம் நடத்துவதை கட்டுப்படுத்துவதுடன் சந்தையில் வெளிப்படைத்தன்மை மற்றும் சட்டபூர்வமான பொருளாதார நடவடிக்கைகளை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.































