தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகேயுள்ள டி.அழகர்நாயக்கன்பட்டியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன், ஏலக்காய் மூட்டைகள் தொடர்பான புகாரில் விசாரணைக்காக செக்கானூரணி காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். 14ஆம் தேதி அதிகாலை காவல் நிலையக் கழிப்பறையில் அவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
நீதி கோரி தொடரும் உறவினர்களின் போராட்டம்
இந்தச் சம்பவத்தில் காவல் ஆய்வாளர் முத்து, தலைமைக்காவலர் பழனிவேல் ராஜன், பெண் காவலர் கலைச்செல்வி ஆகிய மூவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளதுடன், மூவருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அவர்களிடம் நாளை விசாரணை நடைபெற உள்ளது.
பாலகிருஷ்ணனின் கழுத்து, முதுகு, நெற்றி உள்ளிட்ட இடங்களில் காயங்கள் இருப்பதாக குடும்பத்தினர் குற்றம்சாட்டுகின்றனர். காவல்துறையினரின் தாக்குதலால் அவர் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகம் தெரிவித்துள்ள அவர்கள், வழக்கில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்யக் கோருகின்றனர். Madurai police station death விவகாரத்தில் அரசு வழங்கிய ரூ.3 லட்சம் நிவாரணக் காசோலையையும் அவர்கள் ஏற்க மறுத்துள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறி குடும்பத்தினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திருமங்கலம் கோட்டாட்சியர் பொன் ரதியும் காவல்துறையினரும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.





























