ஐந்து நாடுகள் இணையும் திட்டம்
ஜெர்மனி, டென்மார்க், ஆஸ்திரியா, கிரீஸ் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் இந்த முயற்சியில் பங்கேற்கின்றன. ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வெளியே அமைக்கப்படும் முதல் Rwanda return hub இதுவாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. ஐந்து நாடுகளும் இதுவரை மையத்தின் இருப்பிடத்தை அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. எனினும், ருவாண்டாவே இறுதி இடமாக இருக்கலாம் என ஐரோப்பிய தூதரக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ருவாண்டா ஆகஸ்ட் மாதத்தில் சில ஐரோப்பிய நாடுகளுடன் இது தொடர்பான ஆரம்பகட்ட பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ளதாக உறுதி செய்திருந்தது. 2027ஆம் ஆண்டுக்குள் மையத்தை செயல்படுத்தவும், தொடக்கத்தில் சுமார் 100 பேரை தங்க வைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாடும் சுமார் 20 பேரை அனுப்பலாம் எனக் கூறப்படுகிறது.
மனித உரிமை அமைப்புகள் கவலை
இந்த மையம் வழக்கமான தடுப்பு மையமாக இருக்காது என்றும், ருவாண்டா அதிகாரிகள் இதனை ‘வரவேற்பு மையம்’ என அழைக்க விரும்புவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சில குடியேற்றவாசிகள் ருவாண்டாவில் தங்கி வேலை செய்வதற்கான வாய்ப்பும் இருக்கலாம் எனப் பேச்சுவார்த்தை தொடர்பான வட்டாரம் கூறியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச குடியேற்ற அமைப்பு உதவிப் பங்காற்றக்கூடும்.
மனித உரிமை அமைப்புகள் இத்திட்டத்தின் கண்காணிப்பு மற்றும் செயல்திறன் குறித்து கேள்வி எழுப்பியுள்ளன. ருவாண்டாவில் தன்னிச்சையான கைது, தடுப்பு நிலையங்களில் தவறான நடத்தைகள் மற்றும் கருத்து வேறுபாடுகளை ஒடுக்கிய வரலாறு இருப்பதாக ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் சுட்டிக்காட்டியுள்ளது. இதுபோன்ற மையங்கள் போதிய கண்காணிப்பின்றி செயல்பட்டால், குடியேற்றவாசிகள் நீண்டகாலம் நிச்சயமற்ற நிலையில் சிக்கக்கூடும் என விமர்சகர்கள் எச்சரித்துள்ளனர்.




























