மானூர் அரசு பள்ளியில் 120-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். காலாண்டு மற்றும் முதல் பருவத் தேர்வு விடுமுறைக்குப் பிறகு, கடந்த 5-ம் தேதி திங்கட்கிழமை பள்ளி திறக்கப்பட்டபோது, மாணவர்களுக்கான சின்டெக்ஸ் குடிநீர் தொட்டி அசுத்தப்படுத்தப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.
பெற்றோர் கேள்வி; அதிகாரிகள் ஆய்வு
தொட்டியை பிளீச்சிங் பவுடர் மூலம் சுத்தம் செய்த தலைமை ஆசிரியர் ஜெயக்குமார், இந்த விவகாரத்தை இரண்டு நாட்களாக அதிகாரிகளுக்கும் பெற்றோருக்கும் தெரிவிக்கவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்தது. புதன்கிழமை நடைபெற்ற பெற்றோர் ஆசிரியர் கழக மற்றும் பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டத்தில் தகவல் வெளியானதைத் தொடர்ந்து, பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பள்ளிக்கு நேரில் சென்று குடிநீர் தொட்டி இருந்த பகுதி, பள்ளி வளாகப் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சுவரை ஆய்வு செய்தார். சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய போலீஸாருக்கு அவர் உத்தரவிட்டார்.
தலைமை ஆசிரியர் அளித்த புகாரின் அடிப்படையில், அடையாளம் தெரியாத நபர்கள் மீது பிரிவு 279, பிரிவு 272 மற்றும் பிரிவு 123 ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் கீரனூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இன்று காலை கல்வி மற்றும் காவல்துறை அதிகாரிகள் பள்ளிக்கு வந்து பெற்றோர் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழுவினருடன் ஆலோசனை நடத்தினர். தலைமை ஆசிரியரை உடனடியாக இடைநீக்கம் செய்ய வேண்டும் என பெற்றோர் வலியுறுத்தினர். சிசிடிவி கேமரா அமைத்தல், காவலாளி நியமித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டம் முடிவுக்கு வந்தது. Manur school water tank contamination விவகாரத்தையடுத்து பள்ளியில் தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது.
































