சேலம் விமான நிலையத்திலிருந்து மேட்டூர் சென்ற முதலமைச்சருக்கு வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கான மக்கள் வரவேற்பளித்தனர். மேட்டூரை நெருங்கியபோது அவர் வாகனத்தின் மீது நின்று பொதுமக்களை நோக்கிக் கையசைத்தார்.
மேட்டூர் அணையிலிருந்து காவிரி நீர் திறப்பு: சம்பா சாகுபடிக்கு முக்கியத்துவம்
காவிரி, தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமான டெல்டா மாவட்டங்களின் முக்கிய நீராதாரமாக உள்ளது. வழக்கமாக நீர் இருப்பைப் பொறுத்து ஜூன் 12ஆம் தேதி மேட்டூரிலிருந்து நீர் திறக்கப்படும். இதன் மூலம் குறுவை, சம்பா, தாளடி ஆகிய மூன்று நெல் சாகுபடி பருவங்களுக்கும் குடிநீர் தேவைக்கும் உதவி கிடைக்கும்.
இந்த ஆண்டு திறப்பு தாமதமானதால், பல பகுதிகளில் குறுவை சாகுபடி மேற்கொள்ளும் வாய்ப்பை விவசாயிகள் இழந்துள்ளனர். தற்போதைய நீர் திறப்பு முக்கியமாக சம்பா சாகுபடிக்கு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் நான்கு லட்சம் ஹெக்டேருக்கும் மேற்பட்ட நிலங்கள் பயன்பெறலாம்.
சம்பா பயிருக்கு 130 முதல் 145 நாட்கள் வரை நீர் தேவைப்படுகிறது. 120 அடி உயரம் கொண்ட மேட்டூர் அணையில் 91.56 அடி நீர் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீர் இருப்பு மற்றும் வரத்து அடிப்படையில் குறைந்தது 45 நாட்களுக்கு நீர் திறப்பைத் தொடர அரசு திட்டமிட்டுள்ளது. வடகிழக்குப் பருவமழையால் வரத்து அதிகரிக்கும் எனவும் அரசு நம்புகிறது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் காவிரி தனபாலன், சம்பா பயிரையாவது காப்பாற்ற இதுவே சரியான நேரம் என்று வரவேற்றார். தாமதம் ஏற்பட்டால் பருவமழை தீவிரமடைந்து பயிர்கள் சேதமடையலாம் என அவர் கூறினார். எனினும், அணை நீர்மட்டம் மேலும் உயர்ந்த பிறகு, விவசாயிகளுடன் ஆலோசித்து நீர் திறந்திருக்கலாம் என்ற கருத்தும் சில விவசாயிகளிடம் உள்ளது.
மேட்டூர் அணையிலிருந்து காவிரி நீர் திறப்பு, கர்நாடகத்துடனான நீர்ப்பங்கீட்டு மோதலுக்கு மத்தியில் நடந்துள்ளது. காவிரி தீர்ப்பாயம் நிர்ணயித்தும் உச்சநீதிமன்றம் உறுதி செய்தும் உள்ள பங்கீட்டு ஏற்பாட்டை கர்நாடகம் பின்பற்றவில்லை என்பது தமிழ்நாட்டின் நிலைப்பாடு. ஆகஸ்ட் 27 நிலவரப்படி, தமிழ்நாட்டுக்குக் கிடைக்க வேண்டிய 107 டிஎம்சி நீர் நிலுவையில் உள்ளதாக மாநிலம் தெரிவித்துள்ளது. கர்நாடகம் 49 டிஎம்சி மட்டுமே திறந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் தலையீட்டுக்குப் பிறகு, காவிரி நீர் மேலாண்மை ஆணையம் கர்நாடகத்துக்கு 9,000 கனஅடி நீர் திறக்க உத்தரவிட்டுள்ளது. மேகதாது அணைத் திட்டத்துக்கும் தமிழ்நாடு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.




























