டிஜிட்டல் பொருளாதார அமைச்சு புதன்கிழமை (ஆகஸ்ட் 5) வெளியிட்ட அறிக்கையில் நாட்டில் இணைய சூதாட்ட சேவைகள் முற்றிலும் தடை செய்யப்பட்டவை அல்ல எனவும் ஆனால் அவை அரசின் உரிய அனுமதி, பதிவு மற்றும் உரிமம் பெற்ற பின்னரே செயல்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
சட்டபூர்வமான நடைமுறைகளை பின்பற்றாமல் வெளிநாடுகளில் இருந்து செயல்படும் சில ஆன்லைன் பந்தய நிறுவனங்கள் இலங்கை பயனர்களை இலக்காகக் கொண்டு சேவைகளை வழங்கி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் நிதி இழப்புகள், மோசடிகள் மற்றும் பாதுகாப்பு சிக்கல்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து நாட்டின் அனைத்து தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களுக்கும் குறித்த இணையதளங்களுக்கான அணுகலை உடனடியாக நிறுத்துமாறு டிஜிட்டல் பொருளாதார அமைச்சு உத்தரவிட்டுள்ளது. தடை செய்யப்பட்ட இணையதளங்களின் பட்டியலில் உலகளவில் பிரபலமான Stake.com, Bet365, Betway, 1xBet, Betfair, Dafabet, Unibet, 22Bet உள்ளிட்ட பல ஆன்லைன் பந்தய தளங்கள் இடம்பெற்றுள்ளன.
மேலும் 1Win, SpinBetter, 10Cric, BC.Game, MegaPari, Parimatch, Betwinner, Linebet, Rajabets உள்ளிட்ட தளங்களும் இலங்கையில் அணுக முடியாத வகையில் தடை செய்யப்பட்டுள்ளன.இந்த இணையதளங்களில் பணம் முதலீடு செய்வது அல்லது பந்தய நடவடிக்கைகளில் ஈடுபடுவது சட்டவிரோதமானது என பொதுமக்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக உரிய கட்டுப்பாடுகள் இல்லாத வெளிநாட்டு இணைய சூதாட்ட தளங்களில் பணத்தை செலுத்தும் போது மோசடி மற்றும் பண இழப்பு ஏற்படக்கூடும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இலங்கையின் டிஜிட்டல் பொருளாதார துறையில் பாதுகாப்பான மற்றும் ஒழுங்குபடுத்தப்பட்ட இணைய சேவைகளை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகவே இந்த தடை அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.






























