துலூஸின் La Reynerie பகுதியில் உள்ள Avenue Winston-Churchill வீதியில் இன்று சனிக்கிழமை (15) அதிகாலை சுமார் 4.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மின்சார மோட்டார் சைக்கிள்களில் வந்த பலர் அங்கிருந்த இளைஞர்கள் குழுவை நோக்கி திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். பின்னர் அவர்கள் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் மேற்கொண்ட சோதனையில் பல்வேறு வகையான துப்பாக்கிகளுக்குரிய சுமார் 30 வெற்றுத் தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த சில வாகனங்களிலும் துப்பாக்கிக் குண்டுகள் தாக்கிய அடையாளங்கள் காணப்பட்டுள்ளன. எனினும் இந்தச் சம்பவத்தில் யாரும் காயமடைந்ததாக சனிக்கிழமை காலை வரை தகவல் வெளியாகவில்லை.
சம்பவ இடத்தில் 9 மில்லிமீற்றர் தோட்டாக்களுடன் சில போர் ஆயுதங்களில் பயன்படுத்தப்படும் 7.62 மில்லிமீற்றர் தோட்டாக்களும் கண்டுபிடிக்கப்பட்டதாக ஆரம்பக்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களை அடையாளம் காண்பது யார் குறிவைக்கப்பட்டனர் மற்றும் தாக்குதலுக்கான காரணம் என்ன என்பதைக் கண்டறிவதற்கான விசாரணையை ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் சிறப்புக் குற்றப்பிரிவு பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
இதற்கு முன்னரும் Grand Mirail சுற்றுவட்டாரத்தில் குறுகிய காலத்திற்குள் பல துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. குறிப்பாக Bagatelle மற்றும் Bellefontaine பகுதிகளிலும் அண்மையில் துப்பாக்கிச் சூடுகள் இடம்பெற்றுள்ளன. இந்தச் சம்பவங்களுக்கு இடையே தொடர்பு உள்ளதா என்பதையும் பொலிஸார் ஆராய்ந்து வருகின்றனர்.


























