வேலூர் சத்துவாச்சாரி பேஸ்-2 பகுதியைச் சேர்ந்த ஹரிபிரசாத், ஆவின் பாலகத்தில் ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார். இவருக்கும் கீர்த்திகா (27) என்பவருக்கும் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்ட ஹரிபிரசாத், அவருடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறில் கீர்த்திகா தாக்கப்பட்டதாகவும், இதனால் அவர் தனது தாய் வீட்டுக்குச் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருமண தகவல் மையத்தில் நடந்த கொலை
சத்துவாச்சாரி ஆர்.டி.ஓ. சாலை அருகேயுள்ள திருமண தகவல் மையத்தில் கீர்த்திகாவின் தாய் பணியாற்றி வருகிறார். இன்று காலை தாயுடன் அலுவலகத்துக்குச் சென்ற கீர்த்திகாவை, மதியம் 12 மணியளவில் அரிவாளுடன் வந்த ஹரிபிரசாத் தாக்கியதாக போலீஸார் தெரிவித்தனர்.
தாக்குதலைத் தடுக்க முயன்ற கீர்த்திகாவின் இரண்டு கைகளும் துண்டிக்கப்பட்டன. கழுத்து மற்றும் வாய் பகுதிகளிலும் வெட்டுக் காயங்கள் ஏற்பட்டதால், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மகளைக் காப்பாற்றச் சென்ற அவரது தாயும் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
மனைவி உயிரிழந்ததைத் தொடர்ந்து ஹரிபிரசாத் சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் சரணடைந்தார். போலீஸார் கீர்த்திகாவின் உடலை வேலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பினர். கொலை வழக்குப் பதிவு செய்து, சம்பவத்தின் பின்னணி குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். Vellore murder case-ல் கைது செய்யப்பட்ட ஹரிபிரசாத்திடம் தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.































