அவரது கூற்றுப்படி, அப்போது பிரபாகரன் மற்றும் அவரது குழுவினர் அழிவின் விளிம்பில் இருந்தபோதும் மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக 2009 ஜனவரி 31 முதல் பிப்ரவரி 1 வரை 48 மணி நேர போர்நிறுத்தம் அறிவித்தார். பாதுகாப்பு கவுன்சில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தபோதும் இராணுவத்துக்கு கட்டாயமாக அதனை மதிக்கச் சொல்லப்பட்டதாகவும் இதன் விளைவாக இராணுவம் 5 கிலோமீட்டர் பின்வாங்கியதுடன் சுமார் 500 வீரர்களை இழந்ததாகவும் அவர் குற்றம்சாட்டினார். இந்த போர்நிறுத்தம் பிரபாகரன் மற்றும் சிலர் தப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், 2005 ஜனாதிபதி தேர்தலின்போது எல்.டி.டி.ஈ. யினருக்கு 2 மில்லியன் அமெரிக்க டாலர் மஹிந்த ராஜபக்சவினால் வழங்கப்பட்டது என்றும் அதனால் பிரபாகரன் வாக்களிப்பைத் தடுத்ததால் மகிந்த 1.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார் என்றும் பொன்சேகா அதிர்ச்சிகரமாக வெளிப்படுத்தினார். இந்த பரிமாற்றத்தில் பசில் ராஜபக்ஷவும், சில அரசியல்வாதிகளும் ஈடுபட்டதாக அவர் குற்றம்சாட்டினார்.
மேலும், பிரபாகரன் 2010 தேர்தலுக்கு முன் கொல்லப்பட்டால் தமிழ் மக்கள் மகிந்தவுக்கு எதிராக வாக்களிப்பார்கள் என்ற அச்சம் மகிந்த ராஜபக்ஷவுக்கு இருந்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.
நாடு வெற்றியை கொண்டாட காத்திருந்த போது மகிந்த ராஜபக்ஷ தேர்தலை மட்டும் நினைத்தார். ஆனால் இப்போது அவர் என்னை நாட்டை நேசிக்காதவன் என்று கூறுகிறார் என சரத் பொன்சேகா மஹிந்த ராஜபக்சாவை சாடினார்.





























