சர்வதேசம்
ரஷ்யாவின் முழுமையான ஆக்கிரமிப்பு தொடங்கி 1,651 நாட்களும், கிரிமியாவை சட்டவிரோதமாக இணைத்ததாக அறிவித்து 12 ஆண்டுகளும் கடந்துள்ளதாக கூட்டத்தில் குறிப்பிடப்பட்டது. ஜூலை மாதத்தில் மட்டும் உக்ரைன் மீது குறைந்தது 429 ஏவுகணைகள் ஏவப்பட்டதாகவும், இது முந்தைய மாதத்தைவிட இருமடங்குக்கும் அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
2022 பிப்ரவரி முதல் உக்ரைனில் சுமார் 17,000 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் 820 பேர் குழந்தைகள். மேலும் 51,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்; இதில் 3,000 குழந்தைகள் அடங்குவர்.
உக்ரைனின் துறைமுகங்கள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தும் கப்பல்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாகவும் கூறப்பட்டது. இதனால் அத்தியாவசிய உணவு விநியோகம் பாதிக்கப்பட்டு, உலகளவில் உணவுப் பொருட்களின் விலை உயர்வதற்கு காரணமாகியுள்ளது. ஆப்பிரிக்கா முதல் ஆசியா வரையிலான ஐ.நா. உறுப்பு நாடுகளைச் சேர்ந்த கடற்பணியாளர்களும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
கிரிமியா, டொனெட்ஸ்க், லுஹான்ஸ்க், கெர்சன் மற்றும் சபோரிஜியா பகுதிகளில் ரஷ்யா ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பிரிட்டன் கூறியது. குடும்பங்கள் பிரிக்கப்படுதல், குழந்தைகள் கட்டாயமாக நாடுகடத்தப்படுதல், ரஷ்ய கடவுச்சீட்டுகளை ஏற்க வற்புறுத்துதல், தன்னிச்சையான கைது, சித்திரவதை மற்றும் மனிதாபிமான உதவி மறுப்பு உள்ளிட்ட குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டன.
இந்த நடவடிக்கைகள் உக்ரைனின் இறையாண்மையை மாற்றாது; அதன் எல்லைகளையும் மறுவரையறை செய்யாது என பிரிட்டன் வலியுறுத்தியது. அனைத்து நாடுகளும் ஐ.நா. சாசனத்தை நிலைநிறுத்தவும், ரஷ்யாவின் சட்டவிரோதக் கோரிக்கைகளை நிராகரிக்கவும், மனிதாபிமான அணுகலை அனுமதிக்க அழுத்தம் கொடுக்கவும் அழைப்பு விடுக்கப்பட்டது.
ஐ.நா. சாசனத்தின் 51-வது பிரிவின்படி உக்ரைனின் தற்காப்பு உரிமைக்கு ஆதரவு தொடரும் என்றும், முழுமையான, உடனடியான, நிபந்தனையற்ற போர்நிறுத்தம் மற்றும் நீடித்த நியாயமான அமைதையை ஆதரிப்பதாகவும் பிரிட்டன் தெரிவித்தது.
































