2027ஆம் ஆண்டு முதல் மையங்களைத் திறக்கத் திட்டம்
ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வெளியே அமைக்கப்படவுள்ள இந்த ‘திரும்பு மையங்களின்’ முதல் மையம் ருவாண்டாவில் உருவாக்கப்பட உள்ளது. முதல் மையங்கள் 2027ஆம் ஆண்டு திறக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு, அந்த முடிவுக்கு எதிரான அனைத்து மேல்முறையீட்டு வாய்ப்புகளையும் முடித்துள்ள சுமார் 100 ஆண்கள் மற்றும் பெண்கள் இங்கு தங்க வைக்கப்படுவர். சிறார்கள் இந்தத் திட்டத்தில் சேர்க்கப்பட மாட்டார்கள்.
ஐந்து நாடுகளின் தேசிய அதிகாரிகள் சம்பந்தப்பட்டவர்களை ருவாண்டாவுக்கு மாற்றுவார்கள். அங்கு அவர்களை ருவாண்டா அதிகாரிகள் கவனிப்பார்கள். அவர்களுக்கு குடியிருப்பு அனுமதி வழங்கப்பட்டு, ‘வரவேற்பு மையங்களில்’ தங்குமிடம் அளிக்கப்படும். சுதந்திரத்தைப் பறிக்கும் நடவடிக்கைகளோ முள்வேலிகளோ இருக்காது என அந்த நாடுகள் தெரிவித்துள்ளன.
EU Rwanda migrant return hubs திட்டத்தின் கீழ், சில மாதங்கள் தங்கிய பின்னர் ருவாண்டா சமூகத்தில் இணைவதே நோக்கமாகும். தொழில்பயிற்சி மற்றும் மொழிப் பயிற்சிகள் வழங்கப்படும். பின்னர், தங்கள் சொந்த நாடுகளுக்குத் திரும்பும் வாய்ப்பும் அவர்களுக்கு வழங்கப்படும்.
இந்தத் திட்டம் மனித உரிமை அமைப்புகள் மற்றும் சில அரசியல் தலைவர்களிடையே கவலைகளை ஏற்படுத்தியுள்ளது. பங்கேற்கும் நாடுகள் உரிமைகள் பாதுகாக்கப்படும் என உறுதியளித்துள்ளன. பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன், இத்தகைய மையங்கள் பயனற்றவை என்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் மதிப்புகளுக்கு ஏற்புடையவை அல்ல என்றும் முன்பு விமர்சித்திருந்தார்.






























