


ஜூன் 21 அன்று நடைபெறும் பாரம்பரிய Fête de la Musique இசை விழா கொண்டாட்டங்கள் வெப்ப அலை காரணமாக கட்டுப்பாடுகளுடன் நடத்தப்பட்டன. சில நகரங்களில் வெளிப்புற நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டதுடன் சில நிகழ்ச்சிகள் உட்புற அரங்குகளுக்கு மாற்றப்பட்டன. சிவப்பு எச்சரிக்கை அமலில் உள்ள பகுதிகளில் தெருக்களிலும் பொது இடங்களிலும் மதுபானம் அருந்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நகராட்சி ஏற்பாடு செய்யும் விழாக்களில் மதுபான விற்பனையும் நிறுத்தப்பட்டுள்ளது.
பிரான்சில் கடும் வெப்ப அலை பல பகுதிகளில் 40°C முதல் 42°C வரை உயரக்கூடும் என Météo-France எச்சரித்துள்ளது. இந்த வெப்ப அலை வழக்கத்தை விட நீண்டகாலம் நீடிக்கக்கூடும் என்றும் சில இடங்களில் வரலாற்றுச் சாதனை வெப்பநிலைகள் பதிவாகலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு நடவடிக்கையாக பாரிஸில் 1,300 க்கும் மேற்பட்ட குடிநீர் நிலையங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. மேலும் 1,500 க்கும் அதிகமான கடைகள் இலவசமாக குடிநீர் பாட்டில்களை நிரப்பிக் கொடுக்க ஒப்புக்கொண்டுள்ளன. ஆயிரக்கணக்கான காவல்துறையினரும் அவசர உதவி பணியாளர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


























