குவாஹாட்டி நிலச்சரிவு
நகரின் மாத்காரியா பகுதியில் காலை சுமார் 8 மணியளவில் மலையின் ஒரு பகுதி திடீரென சரிந்து வீட்டின் மீது விழுந்தது. அப்போது குடும்பத்தினர் வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருந்ததாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மண் மற்றும் பாறை இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணி உடனடியாக தொடங்கியது.
குவாஹாட்டி நிலச்சரிவில் உயிரிழந்தவர்கள்
உயிரிழந்தவர்கள் நாகென் ராஜ்போங்ஷி, 44, அவரது மனைவி சானு ராஜ்போங்ஷி, 38, மற்றும் அவர்களின் 12 வயது மகள் மீனா ராஜ்போங்ஷி என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மூவரும் இடிபாடுகளுக்குள் புதைந்து உயிரிழந்தனர்.
அவர்களின் 19 வயது மகன் பிப்லப் ராஜ்போங்ஷி இடிபாடுகளில் இருந்து உயிருடன் மீட்கப்பட்டார். அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மீட்கப்பட்ட உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக கவுகாத்தி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டன.
மாவட்ட பேரிடர் மேலாண்மைத் துறையின் பாதுகாப்புக் குழுவினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். தொடர்ச்சியான கனமழை காரணமாக மலைப்பகுதியின் மேலிருந்து மண் சரிந்து வீடு மீது விழுந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. குவாஹாட்டியில் திங்கள்கிழமை இரவு தொடங்கிய மழை தொடர்ந்து பெய்து வருகிறது.
மலை உச்சியில் இருந்த மண் திடீரென சரிந்து வீட்டின் மீது விழுந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். உயிரிழந்த நாகென் ராஜ்போங்ஷி தினக்கூலி தொழிலாளியாகப் பணியாற்றி வந்ததாகவும், குடும்பம் பல ஆண்டுகளாக அந்தப் பகுதியில் வசித்து வந்ததாகவும் உள்ளூர் மக்கள் கூறினர்.
இதனிடையே, ஆம்சிங் மற்றும் ஆத்கான் பகுதிகளில் ஏற்பட்ட மேலும் இரண்டு பெரிய நிலச்சரிவுகளில் தலா ஒருவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும், இந்த உயிரிழப்புகளை அதிகாரிகள் இதுவரை உறுதி செய்யவில்லை. தொடர்ந்து பெய்த கனமழையால் குவாஹாட்டியின் பல தாழ்வான பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.






























