ஆட்டோ ஓட்டுநர் மதுவின் மகனான அபிராம் (17), என்.எஸ்.எஸ். மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை நண்பர் அழைப்பதாகக் கூறி வீட்டை விட்டு சென்ற அவர், பின்னர் வீடு திரும்பவில்லை. அவரது செல்போனும் அணைக்கப்பட்டிருந்தது.
புதரில் இருந்து மாணவனின் உடல் மீட்பு
குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், சைபர் கிரைம் பிரிவு உதவியுடன் அபிராமின் செல்போன் சிக்னல் மற்றும் சமூக வலைதளப் பக்கங்களை போலீசார் ஆய்வு செய்தனர். இன்ஸ்டாகிராமில் பெண் குரலில் பேசப்பட்ட அழைப்பைத் தொடர்ந்தே அவர் வெளியே சென்றது விசாரணையில் தெரியவந்தது.
போலீஸ் விசாரணையில், அபிராமை குறிப்பிட்ட இடத்துக்கு வரவழைத்து கீழே தள்ளி காலால் மிதித்துத் தாக்கியதாகவும், பின்னர் அவரது உடலை சணல் சாக்கில் கட்டி பாங்கப்பாறை பேரூர் சந்திப்பு அருகிலுள்ள ஆள்நடமாட்டமில்லாத புதரில் வீசியதாகவும் கூறப்பட்டுள்ளது. தகவலின் அடிப்படையில் போலீசார் உடலை மீட்டனர்.
இந்த வழக்கில் உமர் முக்தார் (22), 17 வயது சிறுவன் மற்றும் ஒரு சிறுமி கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக திருவனந்தபுரம் மாநகர காவல் ஆணையர் அருள் பி. கிருஷ்ணா தெரிவித்தார். அபிராமின் நண்பரை கொலை செய்ய முதலில் திட்டமிட்டதாகவும், அவர் வராததால் அபிராமை வரவழைத்ததாகவும் போலீசார் கூறுகின்றனர்.
மாயமான மாணவனைத் தேடுவதில் போலீசார் தொடக்கத்தில் அலட்சியம் காட்டியதாகக் கூறி, உறவினர்களும் பொதுமக்களும் ஸ்ரீகாரியம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். Kerala Instagram murder case குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






























