தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் சரக்கு வாகன ஓட்டுநராகப் பணியாற்றி வந்தார். கடந்த நவம்பர் 2-ம் தேதி அதிகாலை தேவரத்தில் இருந்து மதுரைக்கு பார்சல்கள் மற்றும் ஏலக்காய்களை ஏற்றிச் சென்றபோது, வளந்தூர் கண்மாய் கரை அருகே அவரது வாகனத்தில் தீப்பிடித்ததாக கூறப்படுகிறது. இதில் வாகனத்தில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து சேதமடைந்தன.
வழக்கு விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைப்பு
இதுதொடர்பாக பாலகிருஷ்ணன் அளித்த புகாரின் அடிப்படையில், வளந்தூர் காவல் நிலையத்தில் குற்ற எண் 113/2026-ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. புகார் அளித்த 10 நாட்களுக்குப் பிறகு, வழக்கு விசாரணைக்காகவும் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்வதற்காகவும் அவர் நேற்று இரவு 10.45 மணிக்கு செக்கானூரணி காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
காவல் ஆய்வாளர் அறையில் இருந்த பாலகிருஷ்ணன், கழிவறைக்குச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. காலை சுமார் 6 மணியளவில் அவர் அங்கு தூக்கிட்ட நிலையில் மயக்கமடைந்து கிடந்ததாக கூறப்படுகிறது. உடனடியாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
Madurai police station death சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் பாதுகாக்கப்பட்டுள்ளன. இந்த வழக்கை சிபி-சிஐடி போலீஸாரிடம் ஒப்படைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





























