இயற்கைக் காட்சிகளும் வரலாற்றுச் சுவடுகளும்
இந்தப் பாதையில் ஐரோப்பாவின் மிக உயரமான பாறைச் சுவராகக் குறிப்பிடப்படும் ட்ரோல் சுவர் முக்கியக் காட்சியாக உள்ளது. சூரிய ஒளியில் கல்லாக மாறிய ட்ரோல்கள் குறித்த ஸ்காண்டிநேவிய புராணங்களுடன் இந்த மலைச்சிகரங்கள் தொடர்புபடுத்தப்படுகின்றன. மரங்களின் வண்ண மாற்றங்களும், மழைக்குப் பிறகு உருவாகும் நீர்வீழ்ச்சிகளும் ஒவ்வொரு பருவத்திலும் புதிய காட்சியை உருவாக்குகின்றன.
இந்தப் பகுதி ஹாலிவுட் படப்பிடிப்புகளுக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது. ‘மிஷன்: இம்பாசிபிள்’ படத்தின் ஒரு பகுதி இங்கு படமாக்கப்பட்டது. படத்தில் இடம்பெறும் பாலம் தொடர்பான காட்சிக்காக, பாலத்தின் பிரதியை போலந்தில் அமைத்ததாக வழிகாட்டி தெரிவித்துள்ளார்.
Norway Golden Train என்ற பெயர் சுற்றுலா அனுபவத்தைக் குறிப்பதுடன், இரண்டாம் உலகப் போரின் நினைவையும் தாங்குகிறது. 1940 ஏப்ரல் 9ஆம் தேதி, நாசிப் படைகள் வருவதற்கு முன் நோர்வேயின் தங்கக் கையிருப்பு ரகசியமாக வெளியேற்றப்பட்டது. லாரிகளில் கொண்டு செல்லப்பட்ட அந்தத் தங்கம் பின்னர் இந்த ரயிலில் பயணித்ததாக கூறப்படுகிறது. அக்கால சிறிய ரயில் நிலையம் இன்னும் அங்கு காணப்படுகிறது. ஃபியோர்டின் முடிவில் பாதை நிறைவடையும் இந்தப் பயணம், இயற்கையையும் வரலாற்றையும் இணைக்கிறது.































