சம்பவம் தொடர்பான காவல்துறை விசாரணை
சனிக்கிழமை அதிகாலை சுமார் 12.40 மணியளவில் கோஸ்னெல்ஸ் பகுதியில் உள்ள ஒரு வீட்டை நோக்கி அரை தானியங்கி துப்பாக்கியால் 20-க்கும் மேற்பட்ட முறை சுடப்பட்டதாகக் கூறப்படுகிறது. குண்டுகள் வீட்டின் படுக்கையறை ஜன்னல் மற்றும் சுவரைத் தாக்கின. அந்த நேரத்தில் குழந்தைகள் உட்பட ஏழு பேர் வீட்டுக்குள் இருந்தனர். கண்ணாடித் துண்டுகள் தாக்கியதில் ஒருவருக்கு சிறிய காயம் ஏற்பட்டது; யாரும் தீவிரமாகக் காயமடையவில்லை. வீட்டில் இருந்தவர்கள் குறிவைக்கப்பட்டவர்கள் அல்ல என்று கருதப்படுகிறது.
துப்பாக்கியை எடுத்துச் செல்லவும், பின்னர் மீண்டும் ஒப்படைக்கவும் தேவையான இடங்கள் குறித்த தகவல்கள் மின்னணு வழியாக வழங்கப்பட்டிருக்கலாம் என விசாரணையாளர்கள் சந்தேகிக்கின்றனர். சம்பவத்தில் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் துப்பாக்கி இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. அந்தக் குடும்பம் சில வாரங்களுக்கு முன்புதான் மேற்கு ஆஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Perth drive-by shooting வழக்கில் சிறுவன் திங்களன்று கைது செய்யப்பட்டார். சட்டவிரோதமாக துப்பாக்கி பயன்படுத்துதல், உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துதல், திருடப்பட்ட பொருளை வைத்திருத்தல், உரிய அனுமதியின்றி வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட எட்டு குற்றச்சாட்டுகள் அவர்மீது சுமத்தப்பட்டுள்ளன. அடுத்த வாரம் பெர்த் குழந்தைகள் நீதிமன்றத்தில் அவர் மீண்டும் ஆஜராகிறார்.
மேற்கு ஆஸ்திரேலியாவில் வகை D ஆயுதங்கள் 1996ஆம் ஆண்டு போர்ட் ஆர்தர் படுகொலைக்குப் பின்னர் தடை செய்யப்பட்டுள்ளன. இத்தகைய ஆயுதங்கள் காவல்துறை, ராணுவம் மற்றும் குறிப்பிட்ட அரசு அமைப்புகளுக்கே சட்டபூர்வமாக அனுமதிக்கப்பட்டுள்ளன.





























