அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,
இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வழக்கமான மகிழ்ச்சி மற்றும் கொண்டாட்டங்களுடன் வரவில்லை என்றும், நாடு முழுவதையும் உலுக்கிய இயற்கை பேரழிவால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களின் துக்கம், வலி மற்றும் அமைதியான வேதனையின் மத்தியில் இந்தக் கிறிஸ்துமஸ் தினம் வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், கிறிஸ்துமஸின் உண்மையான அர்த்தத்திற்கேற்ப, இயேசு கிறிஸ்துவின் போதனைகளால் வழிநடத்தப்பட்டு, நாட்டின் மக்கள் தங்களிடையிலான வேறுபாடுகளை ஒதுக்கி வைத்து, பேரழிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிக்க ஒற்றுமையுடன் ஒன்றுபட்டுள்ளமை பாராட்டத்தக்கது என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
மேலும்,
மக்களின் செயல்கள் மூலமாக அன்பு, இரக்கம் மற்றும் ஒருவரையொருவர் நேசிக்க வேண்டும் என்ற கிறிஸ்துவின் உன்னத போதனையின் மதிப்புகள் உலகிற்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த நிலையில்,
அனைத்து சமூகங்களும் ஒரு பொதுவான நோக்கத்துடனும், கூட்டுப் பொறுப்புடனும் ஒன்றிணைந்து, நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டிய ஒரு முக்கியமான கட்டத்தில் நாம் நிற்பதாகவும் அவர் தெரிவித்தார்.
நாட்டு மக்களின் நம்பிக்கைகளையும் எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றும் வகையில், “புதிய நாட்டை” கட்டியெழுப்பும் பொதுவான இலக்கை நோக்கி அரசாங்கம் தொடர்ந்து அயராது உழைக்கும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய உறுதியளித்துள்ளார்.
இறுதியாக,
இந்த கிறிஸ்துமஸ் தினத்தில், ஒற்றுமை, அன்பு, இரக்கம் மற்றும் பொறுப்புணர்வுடன் செயல்படும் குடிமக்களாக அனைவரும் ஒன்றிணைந்து, சிறந்த நாளைக்கான கனவை நனவாக்க உறுதிமொழி எடுக்க வேண்டுமென அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
இலங்கையிலும் உலகெங்கிலும் உள்ள அனைத்து கிறிஸ்தவ பக்தர்களுக்கும் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள் என பிரதமர் தனது செய்தியில் தெரிவித்துள்ளார்.




























