பாசிப்பட்டினம் பாசியம்மன் கோவில் கடற்கரை பகுதியில் சட்டவிரோதமாகப் போதைப்பொருள் கடத்தப்படுவதாக எஸ்.பி.பட்டினம் காவல் ஆய்வாளர் டேவிட் ரவிராஜனுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, காவல் ஆய்வாளர் தலைமையிலான தனிப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
கண்காணிப்பைத் தொடர்ந்து வீட்டில் சோதனை
அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றித்திரிந்த நபரைப் பிடித்து சோதனை செய்தபோது, அவரிடமிருந்து 2 கிலோ கிராம் ஹஷீஷ் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், கஞ்சா செடியில் இருந்து பெறப்படும் பிசின் வகையான இந்தப் போதைப்பொருளை இலங்கைக்குக் கடத்துவதற்காகப் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து அவரது வீட்டில் சோதனை நடத்தியதில் மேலும் 17.8 கிலோ கிராம் ஹஷீஷ் பறிமுதல் செய்யப்பட்டது. இச்சோதனையில் மொத்தமாக 19.8 கிலோ போதைப்பொருள் சிக்கியது. Ramanathapuram drug seizure வழக்கில் கைது செய்யப்பட்ட மனோ மீது ஏற்கனவே தொண்டி மற்றும் எஸ்.பி.பட்டினம் காவல் நிலையங்களில் போதைப்பொருள் வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவர்மீது போதைப்பொருள் கடத்தல் வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.





























