மலேசிய அரச காவல்துறை, மலேசிய அரச விமானப்படை, மலேசிய கடல்சார் அமலாக்க நிறுவனம் மற்றும் மலேசிய தீயணைப்பு, மீட்புத் துறை ஆகியவை இந்த நடவடிக்கையில் ஈடுபடும் என்று சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜுல்கெப்ளி அஹ்மத் தெரிவித்தார்.
விசாரணை முடியும் வரை மாற்று மருத்துவ விமானங்கள்
பறக்கும் மருத்துவர் சேவை ஹெலிகாப்டர் தொடர்பான விபத்து விசாரணை முடியும் வரை இந்த மாற்று ஏற்பாடுகள் பயன்படுத்தப்படும். மலேசிய தீயணைப்பு, மீட்புத் துறையின் அவசர மருத்துவ வான்வழி மீட்புச் சேவையான EMARS உதவியும் பெறப்படும் என்று அமைச்சர் கூறினார்.
சேவையை நீண்ட காலம் நிறுத்தி வைக்க முடியாது என்றும், அதே நேரத்தில் பாதுகாப்பு அம்சங்களை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். விசாரணை முடிவுகளைப் பெற்ற பிறகு, சேவையை மீண்டும் தொடங்குவதற்கான அடுத்தகட்ட முடிவுகள் எடுக்கப்படும்.
சுகாதார அமைச்சின் ஏழு பறக்கும் மருத்துவர் குழுக்கள், வழக்கமான போக்குவரத்து மூலம் எளிதில் சென்றடைய முடியாத சரவாக்கின் தொலைதூரப் பகுதிகளில் வசிக்கும் சுமார் 14,000 முதல் 15,000 பேருக்கு சேவை வழங்குகின்றன.
செவ்வாய்க்கிழமை மாலை 3.40 மணியளவில், லாயாங்-லாயாங் ஏரோஸ்பேஸ் நிறுவனம் இயக்கிய BO-105 ஹெலிகாப்டர், லாங் லெல்லாங் STOLport ஓடுதளத்தின் முடிவருகே விபத்துக்குள்ளானது. அதில் இருந்த ஐந்து பேரும் உயிரிழந்தனர். மருத்துவர் டாக்டர் ஐனுல் பராஹ் கமாருதீன், கேப்டன் ஜைனோல் அஃபிக் பீ ஷாம், மருத்துவ உதவியாளர் அலெக்சன் அடிட் ஹென்றி மற்றும் செவிலியர்கள் ஜெஸ்ஸி பாயா ஜோக், டெப்ரா மோசெட் ஆகியோர் உயிரிழந்தவர்களில் அடங்குவர். இந்த விபத்துக்குப் பிறகே Sarawak flying doctor service தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.





























