ஜனநாயகப் பங்கேற்பும் பொறுப்புக்கூறலும்
“நல்லாட்சியை வலுப்படுத்தி, பங்கேற்பு, நம்பிக்கை மற்றும் அனைவருக்கும் வாய்ப்புகள் மூலம் சமூகங்களை வலுப்படுத்துதல்” என்ற தலைப்பில் நடைபெற்ற பிரதான அமர்வில் உரையாற்றிய சபாநாயகர், நிலையான ஜனநாயகத்தின் அடித்தளமாக மக்கள் நம்பிக்கையும் உள்ளடக்கிய வாய்ப்புகளும் இருப்பதாகக் குறிப்பிட்டார்.
இலங்கையின் 10ஆவது நாடாளுமன்றத்தில் 22 பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளதாகவும், இது மொத்த ஆசனங்களில் 9.8 சதவீதம் எனவும் அவர் தெரிவித்தார். அவர்களில் இருவர் மலையக சமூகத்தைச் சேர்ந்தவர்கள். மேலும், மாற்றுத்திறனாளி ஒருவர் முதல் முறையாக நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகவும், அவருக்கு Commonwealth Parliamentary Association அமைப்பு “2026 Distinguished New Parliamentarian” விருதை வழங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டது.
பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாற்றுத்திறனாளிகள், பொது நிதி, பொது கணக்குகள் மற்றும் அரச நிறுவனங்கள் தொடர்பான குழுக்கள் வெளிப்படைத்தன்மையையும் பொது பொறுப்புக்கூறலையும் உறுதிப்படுத்துவதாக விளக்கப்பட்டது. நாடாளுமன்ற விவாதங்களை சைகை மொழிபெயர்ப்புடன் ஒளிபரப்புதல் மற்றும் குழுக் கூட்டங்களை ஊடகங்கள், சிவில் சமூகத்துக்கு திறந்து விடுதல் ஆகிய நடவடிக்கைகளும் சுட்டிக்காட்டப்பட்டன.
சுகாதாரப் பாதுகாப்பு குறித்து கலந்துரையாடல்
கூட்டத்தின் பக்க நிகழ்வுகளில் உலக சுகாதார அமைப்பு பிரதிநிதிகளுடன் இலங்கை குழு கலந்துரையாடியது. சுகாதாரப் பாதுகாப்பை வலுப்படுத்துதல் மற்றும் Universal Health Preparedness Review தொடர்பான முன்னேற்றம் குறித்து Ludy Suryantoro உடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. சட்ட ஆதரவு, நிதி ஒதுக்கீடு, கண்காணிப்பு மற்றும் பாதிக்கப்படக்கூடிய மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் நாடாளுமன்றத்தின் பங்கு வலியுறுத்தப்பட்டது.
Sri Lanka IPU Assembly அமர்வுகளில் உலக அமைதி, செயற்கை நுண்ணறிவு, கடல்சார் பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு, காலநிலை மாற்றம் மற்றும் சர்வதேச மனிதாபிமானச் சட்ட அமுலாக்கம் உள்ளிட்ட விடயங்களும் ஆராயப்பட்டன.






























