விண்ணப்பிக்கும் முறை மற்றும் தேவையான ஆவணங்கள்
விண்ணப்பதாரர்கள் முதலில் இலங்கை போலீஸின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள டிஜிட்டல் சேவைகள் பிரிவின் “Clearance Certificate” பகுதியிலிருந்து விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட படிவத்துடன் தேசிய அடையாள அட்டை, கடவுச்சீட்டு மற்றும் பிறப்புச் சான்றிதழை அருகிலுள்ள காவல் நிலையத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
தேசிய அடையாள அட்டையில் உள்ள பெயரும் கடவுச்சீட்டில் உள்ள பெயரும் மாறுபட்டிருந்தால், உறுதிமொழிப் பத்திரமும் வழங்கப்பட வேண்டும். வெளிநாடுகளில் வசிப்பவர்கள் தங்களது நெருங்கிய உறவினர் மூலம் ஆவணங்களைச் சமர்ப்பிக்கலாம்.
காவல் நிலைய அதிகாரிகள் தேவையான தகவல்களைத் தரவுத்தளத்தில் பதிவுசெய்ய உதவுவார்கள். தகவல்களை விண்ணப்பதாரர்கள் கவனமாகச் சரிபார்த்து, கையொப்பமிட்டு உறுதிப்படுத்த வேண்டும். அதன் பின்னர் மாற்றங்கள் செய்ய முடியாது. கட்டணமாக 5,000 ரூபாய் வசூலிக்கப்பட்டு, அதிகாரப்பூர்வ ரசீது வழங்கப்படும்.
முன்னர் அறிவிக்கப்பட்ட மின்னஞ்சல் வழியாக இனி விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கக் கூடாது. ஏற்கனவே மின்னஞ்சல் மூலம் விண்ணப்பித்தவர்கள் காவல் நிலையத்தில் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும். வெளிநாட்டு குடிமக்கள் தங்கள் நாட்டிலுள்ள இலங்கைத் தூதரகம் மூலம் விண்ணப்பிக்கலாம். கணினி அமைப்பு முழுமையாகச் சீரமைக்கப்பட்டதும் Sri Lanka Police Clearance Certificate பெறும் இணையவழி வசதி மீண்டும் தொடங்கப்படும்.
































