சுவிட்சர்லாந்து அரசு (Federal Council) 2026 ஏப்ரல் 15 அன்று “Lex Koller” என்ற நிலச் சட்டத்தை மேலும் கடுமையாக்கும் புதிய திட்டத்தை முன்வைத்துள்ளது. இந்த மாற்றங்கள் மூலம் வெளிநாட்டு குடிமக்கள் சுவிஸில் வீடு வாங்குவது மீது அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.
குறிப்பாக ஐரோப்பிய ஒன்றியம் (EU) மற்றும் EFTA நாடுகளுக்கு வெளியே உள்ளவர்கள் (third-country nationals) சுவிஸில் முதன்மை வீடு வாங்க முன்பாக கட்டாயமாக அனுமதி பெற வேண்டும் என புதிய விதி முன்மொழியப்பட்டுள்ளது.
இப்போது நிலவும் விதிகளின்படி சுவிஸில் தங்கியிருக்கும் வெளிநாட்டு குடிமக்கள் முன்னதாக அனுமதி இல்லாமல் வீடு வாங்க முடியும். ஆனால் புதிய சட்டத்தின் கீழ் அவர்கள் அந்த வீட்டில் உண்மையாக வசிக்கும் காலத்திலேயே அதை வைத்திருக்க அனுமதிக்கப்படும் சுவிஸை விட்டு வெளியேறினால் இரண்டு ஆண்டுகளுக்குள் அந்த சொத்தை விற்க வேண்டும்.
மேலும் இந்த சட்ட மாற்றங்கள் முதலீட்டு நோக்கில் வீடுகள் வாங்குவதை குறிவைக்கின்றன. வெளிநாட்டவர்கள் இனி வாடகைக்கு விடுவதற்காக வர்த்தக கட்டிடங்களை வாங்க முடியாது. அதேபோல்# விடுமுறை வீடுகள் (holiday homes) வாங்குவதற்கான அனுமதிகள் குறைக்கப்படுவதுடன் மீண்டும் விற்பனை செய்யும் விதிகளும் கடுமையாக்கப்படுகின்றன.
இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கம் சுவிஸில் வீட்டு விலை அதிகரிப்பை கட்டுப்படுத்துவதும் உள்ளூர் மக்களுக்கு வீடு கிடைப்பதை உறுதி செய்வதுமாகும். 2024 முதல் வீட்டு விலைகள் 20% க்கும் அதிகமாக உயர்ந்துள்ள நிலையில் வீட்டு பற்றாக்குறை அதிகரித்து வருவதால் அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.
மேலும் குடியேற்ற எண்ணிக்கை அதிகரிப்பது குறித்து உள்ள கவலைகளும் இந்த சட்ட மாற்றத்திற்கு காரணமாக கூறப்படுகின்றன. 2050க்குள் மக்கள் தொகையை 10 மில்லியனாக கட்டுப்படுத்தும் முன்மொழிவை முன்வைக்கும் தேசிய வாக்கெடுப்பும் இந்த பின்னணியில் நடைபெறவுள்ளது.

























