மார்ட்டின் கவுண்டி நீதிமன்றத்தில் புதன்கிழமை நடைபெற்ற விசாரணையில், 50 வயதான வுட்ஸ் குற்றவாளி என அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்டார். இது அவரது இரண்டாவது willful and wanton reckless driving குற்றமாகும். அவருக்கு 1,000 அமெரிக்க டொலர் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், அவரது ஓட்டுநர் உரிமம் ஐந்து ஆண்டுகளுக்கு இடைநிறுத்தப்பட்டது.
டைகர் வுட்ஸ் ஓட்டுநர் உரிமம் தடை மற்றும் கூடுதல் அபராதம்
சட்டபூர்வமான பரிசோதனைக்கு உட்பட மறுத்த குற்றச்சாட்டையும் வுட்ஸ் ஏற்றுக்கொண்டார். இதற்காக மேலும் 500 டொலர் அபராதம் விதிக்கப்பட்டது. கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதாகப் பதிவு செய்யப்பட்ட தனி குற்றச்சாட்டிலும் ஐந்து ஆண்டு உரிமத் தடை விதிக்கப்பட்டது. இந்த தடைக்காலத்தில் சிறப்பு அனுமதி பெற முயற்சிக்கமாட்டேன் என அவர் ஒப்புக்கொண்டார்.
நீதிமன்ற ஆவணங்களின்படி, அபராதங்கள் மற்றும் வழக்குச் செலவுகளாக வுட்ஸ் மொத்தம் 2,131.44 டொலர் செலுத்தினார். இந்த உடன்பாடு, புளோரிடாவின் ஜூபிடர் தீவு அருகே ஏற்பட்ட வாகன விபத்தைத் தொடர்ந்து தொடங்கிய குற்றவியல் வழக்கை முடிவுக்குக் கொண்டுவந்துள்ளது.
மார்ச் 27 அன்று ஹோப் சவுண்ட் பகுதியில் இந்த விபத்து நடந்தது. வுட்ஸ் ஓட்டிய லேண்ட் ரோவர், குறுகிய இருவழிச் சாலையில் ஒரு லாரியை முந்த முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்தது. அந்த சாலையில் வேக வரம்பு மணிக்கு 30 மைல்கள். வாகனம் ஒரு டிரெய்லரில் மோதி, சாலையோரம் சென்று அதன் ஓட்டுநர் பக்கத்தில் கவிழ்ந்தது.
விபத்தின் போது வுட்ஸ் மட்டும் வாகனத்தில் இருந்தார். பயணியர் பக்கக் கதவு வழியாக வெளியேறிய அவர் காயமடையவில்லை. அதிகாரிகள் அவரிடம் மது பரிசோதனை நடத்தியபோது மது இருப்பது தெரியவில்லை. ஆனால் போதைப்பொருள் பரிசோதனைக்கான சிறுநீர் மாதிரியை வழங்க அவர் மறுத்தார். அன்றைய தினம் பல மருந்துகளை எடுத்ததாகவும் அவர் தெரிவித்தார்.
டைகர் வுட்ஸ் ஓட்டுநர் உரிமம் தடை அமலுக்கு வரும் நிலையில், அவரது சமீபத்திய கோல்ஃப் வாழ்க்கையும் குறைந்துள்ளது. உடல்நலத்திற்காக சிகிச்சை பெறுவதாக அவர் முன்பு அறிவித்திருந்தார். 2024 ஜூலைக்குப் பிறகு அதிகாரப்பூர்வ PGA Tour போட்டியில் அவர் விளையாடவில்லை.
































