வெளிநாட்டில் உள்ள சக்திவாய்ந்த போதைப்பொருள் கடத்தல்காரரான உனாகுருவ சாந்தவின் நெருங்கிய உறவினர்கள் இருவரே இவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மிட்டியாகொட – கிரலகஹவெல பிரதேசத்தில் பெண் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டு 24 மணித்தியாலங்கள் கடப்பதற்கு முன்னரே இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நேற்று மாலை தங்காலை உனாகுருவ பிரதேசத்தில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றினுள் வைத்து இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.
தம்பதியினர் வர்த்தக நிலையத்தை நடத்தி வந்த நிலையில், அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவரே இந்த துப்பாக்கிச்சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டில் பலியான தம்பதியினர் 68 மற்றும் 58 வயதுடையவர்கள்.
உனாகுருவ சாந்தவின் மாமா மற்றும் அத்தை என பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தில் இருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் கைவிடப்பட்ட நிலையில் துப்பாக்கிதாரிகள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளை பொலிஸார் நேற்று கண்டுபிடித்துள்ளனர்.
அத்துடன் அண்மையில் சீனிமோதர மற்றும் தங்காலை பிரதேசத்தில் 03 லாரிகளில் பாதுகாப்புப் படையினரால் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் உனாகுருவ சாந்தவுக்கு சொந்தமானது என்பதுடன், அது தொடர்பான தகராறு காரணமாகவே இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
எவ்வாறாயினும், துப்பாக்கிச்சூடு நடத்திய தரப்பினர் இதுவரை உறுதி செய்யப்படவில்லை என்பதுடன், உனாகுருவ சாந்த மற்றும் கரந்தெனிய சுத்தா ஆகியோருக்கிடையில் நீண்டகாலமாக தகராறு நிலவி வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்துடன், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளால் இந்த ஆண்டு இதுவரை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவங்களின் எண்ணிக்கை 105 ஆக உயர்ந்துள்ளதுடன், 57 பேர் உயிரிழந்துள்ளதுடன் 56 பேர் காயமடைந்துள்ளனர்.


























