ஸ்பெயினைச் சேர்ந்த லிசா என்ற சுதந்திர கிராபிக் வடிவமைப்பாளர், 2022ஆம் ஆண்டு ChatGPT வெளியான பிறகு தனது பணியில் மாற்றம் ஏற்பட்டதாகக் கூறுகிறார். முன்பு லோகோ மற்றும் பேக்கேஜிங் வடிவமைப்புகளை உருவாக்கிய அவர், பின்னர் AI உருவாக்கிய படங்களை அச்சிடத் தகுந்தவையாக மாற்றும் பணிகளை அதிகம் பெற்றார்.
2025ஆம் ஆண்டில், அவரது லோகோ மற்றும் பேக்கேஜிங் பணிகளில் 90 சதவீதம் AI உள்ளடக்கத்தைச் சீரமைப்பதாக இருந்தது. அது அவரது ஆண்டு வருமானத்தில் 60 முதல் 70 சதவீதம் வரை பங்களித்தது. சில வடிவமைப்புகளைச் சரிசெய்வதற்குப் பதிலாக முழுமையாக மீண்டும் உருவாக்க வேண்டியிருந்தது. குறைந்த கட்டணமும் பதிப்புரிமை குறித்த கவலையும் அவரை அந்தப் பணிகளில் சிலவற்றை நிராகரிக்கச் செய்தன.
AI உருவாக்கும் குறைந்த தரமான வெளியீடுகள் பொதுவாக “AI slop” என அழைக்கப்படுகின்றன. அவற்றில் மங்கலான படங்கள், மீண்டும் மீண்டும் வரும் சொற்கள், இயல்பற்ற குரல்கள், தவறான உடல் உறுப்புகள் மற்றும் சீரற்ற காணொளிக் காட்சிகள் இடம்பெறலாம்.
Freelancer.com தளத்தில் AI பிழைகளைச் சரிசெய்வது தொடர்பான வேலைப் பதிவுகள் 2025 ஆகஸ்ட் முதல் 2026 ஜூன் வரை 87 சதவீதம் அதிகரித்து 10,760 ஆக உயர்ந்தன. Upwork தளத்தில் இதுபோன்ற பணிகள் ஆண்டுக்கு ஆண்டு 70 சதவீதம் உயர்ந்தன. Fiverr தளத்தில் “AI cleanup” சேவைகளுக்கான தேடல்கள் 2023 முதல் 2026 வரை 20 மடங்குக்கும் அதிகமாக வளர்ந்தன.
ஆனால் AI cleanup work எப்போதும் விரைவான அல்லது குறைந்த செலவிலான பணியாக இருப்பதில்லை. அமெரிக்காவைச் சேர்ந்த ஓவியர் டாட் வான் லிண்டா, ஒரு குழந்தைகள் புத்தகத்திற்கான 13 முதல் 15 AI படங்களைச் சரிசெய்ய 500 டாலர் வழங்கப்பட்ட பணியை நிராகரித்தார். ஒவ்வொரு படத்திற்கும் சில மணி நேரம் முதல் பல நாட்கள் வரை ஆகலாம் என அவர் கூறினார். அவரது மணிநேரக் கட்டணம் 65 டாலர்.
ஆஸ்திரேலிய எழுத்தாளர் கிம் டன்பாரின் பணிச்சுமையில் சுமார் 60 சதவீதம் தற்போது AI உரையைத் திருத்துவதாக உள்ளது. அசல் எழுத்துப் பணியில் கிடைத்த மாத வருமானம், தொற்றுநோய்க் கால வருமானத்தின் மூன்றில் ஒரு பங்காகக் குறைந்துள்ளது. சிலர் இந்தப் பணியை சுவாரசியமாகக் கருதினாலும், பலர் அது படைப்பாற்றலைக் குறைப்பதாகக் கூறுகின்றனர்.
AI மாதிரிகள் மேம்பட்டால் இந்த வேலைகளுக்கான தேவை குறையலாம் என சிலர் அஞ்சுகின்றனர். இருப்பினும், தவறுகளை கண்டறிந்து வணிகப் பயன்பாட்டுக்கு ஏற்ற உள்ளடக்கமாக மாற்ற மனிதர்களின் கண்காணிப்பு இன்னும் தேவைப்படுவதாக மற்றவர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் AI cleanup work தற்காலிக வருமானமா அல்லது நீடிக்கும் புதிய தொழிலா என்பது தெளிவாகவில்லை.

































